Published : 05 Nov 2017 11:00 AM
Last Updated : 05 Nov 2017 11:00 AM
ஆறுகளில் ஓடும் தண்ணீருக்கு மணல்தான் முதுகெலும்பு. ஆனால், அந்த முலுகெலும்பையே உடைக்கும் அளவுக்கு வைகை ஆற்றில் மணல் கொள்ளை பகிரங்கமாக நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்கு தற்போது கடும் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இரண்டேகால் யூனிட் லாரி மணல் 30 ஆயிரம் ரூபாய் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை விற்கிறது. இதுவே, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 50 ஆயிரம் ரூபாய் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை விற்கிறது. அதனால், தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு அதிக அளவில் மணல் கடத்தப்படுகிறது.
அரசியல் பின்னணி
முன்பு மணல் கொள்ளையால் காவிரி, தென்பெண்ணை ஆறு, பாலாறு போன்ற ஆறுகள் பாழாயின. இந்த ஆறுகளில் மணல் போதிய அளவு கிடைக்காததால் மணல் கொள்ளையர்கள் தற்போது வைகை ஆற்றை குறி வைத்துள்ளனர். இவர்கள் பலமான அரசியல் பின்னணியுடன் மிகப்பெரிய நெட்வொர்க் அமைத்து மதுரை மாவட்டத்தில் கோச்சடை, விளாங்குடி, வண்டியூர், துவரிமான், புறநகரில் சோழவந்தான், பரவை மற்றும் திண்டுக்கல், தேனி, சிவகங்கை உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வைகை ஆற்றின் வழித்தடங்களில் மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இரவில் மணல் கொள்ளை
வைகை ஆற்றில் ஆட்கள் நடமாட்டமே இல்லாத, செல்ல முடியாத பகுதிகளில் மாலை 6 மணிக்கு மேல் தொடங்கும் மணல் கொள்ளை மறுநாள் காலை 7 மணி வரை நடக்கிறது.
ஆற்றுக்குள் லாரிகள் செல்ல முடியாது என்பதால் ஒவ்வொரு இடத்திலும் 20-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் மணல் கொள்ளைக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆற்றில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மணல் அள்ளுகிறார்கள். ஒரு தரப்பினர் மணலை வெட்டி எடுக்க, மற்றொரு தரப்பினர் சலிக்க, இன்னொரு தரப்பினர் அவற்றை மாட்டு வண்டியில் அள்ளிப் போடுவதுமாக ஒவ்வொரு நாளும் வைகை ஆற்றையே சுரண்டிக் கொண்டிருக்கின்றனர்.
லாரிகளில் மணல் கடத்தல்
மாட்டு வண்டியில் அள்ளப்படும் மணல், அருகில் உள்ள மறைவான ஒரு பகுதியில் கொண்டு சென்று குவிக்கப்படுகிறது. அங்கிருந்து லாரிகளில் இரவு நேரங்களில் கடத்தப்படுகிறது. இதற்காக வைகை ஆற்றில் மணல் அள்ளப்படும் பகுதியில் இருந்து, அப்பகுதியில் உள்ள மெயின் ரோடு வரை 20-க்கும் மேற்பட்ட நபர்கள் மொபைல் போன்களுடன் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இவர்களை மீறி, அப்பகுதியில் ஆற்றுக்குள் வழிதெரியாமல் கூட யாரும் வர முடியாது. மீறி யாராவது வந்தால் கடுமையாக மிரட்டி அனுப்புகின்றனர்.
இதுகுறித்து மதுரை வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் எம்.ராஜன் கூறிய தாவது:
வைகை ஆறு நீர்ப்பிடிப்பு பகுதியிலும் முன்புபோல மழையில்லை. கிளை நதிகளின் நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. வறண்ட வைகை ஆற்றின் கரைகள், மதுரை நகர் பகுதியில் பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டு கான்கிரீட் கட்டிடங்களாக உயர்ந்து நிற்கின்றன. தற்போது வைகை ஆற்றில் மணல் கொள்ளையும் நடக்கத் தொடங்கியுள்ளது.
மணல்தான் அதில் ஓடும் தண்ணீருக்கு முதுகெலும்பு போன்றது. ஆனால், அந்த முதுகெலும்பை உடைக்கும் அளவுக்கு மணல் கொள்ளை நடக்கிறது. வைகை ஆற்றில் கடத்தப்படும் மணல் கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது என்றார்.
இதுபற்றி பொதுப்பணித்துறை உயர் அதிகாரியிடம் கேட்ட போது, ‘‘பணியாளர்கள் பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது. அதனால், இரவில் கண்காணிக்க முடியவில்லை. ஆட்சியரிடம் தெரிவித்து மணல் கடத்தலை தடுக்க தனி குழு அமைக்கப்படும் ’’ என்றார்.
மணல் கொள்ளையால் வைகையின் கதி?
வேளாண் பொறியாளர் பிரிட்டோராஜ் கூறியதாவது: வைகை ஆற்றை பொறுத்தவரையில் கடைமடை என்பது ராமநாதபுரம் மாவட்டம். நீர் போகும் பாதையில் அதிகமான மேடு, பள்ளங்கள் இல்லாமல் இருந்தால் ஒரே சீராக தண்ணீர் செல்லும். அந்த ஆறு செல்லும் மாவட்டங்களுக்கும் பலன் தரும். அப்படி இல்லாமல் மேடு, பள்ளங்கள் அதிகமாக இருந்தால் கடைமடைக்கு தண்ணீர் சென்றடையாது. நிலத்தடி நீர்மட்டம் செறிவூட்டப்படாமல் போய்விடும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT