Published : 09 Apr 2014 11:44 AM
Last Updated : 09 Apr 2014 11:44 AM
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் 3 வாரம் தடைவிதித்திருப்பதால், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டது.
எனினும், ஜெயலலிதா,சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தொடர்புடைய மெடோ அக்ரோ ஃப்ர்ம், லெக்ஸ் பிராப்பர்ட்டி உள்ளிட்ட நிறுவனங்களின் மனுக்கள் மீது புதன்கிழமை (ஏப்ரல் 9) முதல் தொடர்ந்து விசாரணை செய்யப்படும் என நீதிபதி டி'குன்ஹா தெரிவித்தார்.
ஜெயலலிதா,அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வந்தது.
நீதிமன்றத்தில் பேசிய அரசு வழக்கறிஞர் பவானி சிங், அதனைத் தொடர்ந்து சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு 3 வாரகால இடைக்கால தடைக்கான உத்தரவு நகலை நீதிபதியிடம் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து சொத்துக் குவிப்பு வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். அன்றிலிருந்து அரசு வழக்கறிஞரின் இறுதிவாதம் தொடரும் என்றும் தெரிவித்தார்.
நீதிபதி டி'குன்ஹா தொடர்ந்து பேசுகையில், “பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் மெடோ அக்ரோ ஃபார்ம்,லெக்ஸ் பிராப்பர்ட்டி டெவலப்மெண்ட், சைனோரா, ராம்ராஜ் அக்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் தொடுத்த மனுக்களின் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறும்.
முதல்கட்டமாக மெடோ அக்ரோ நிறுவனம் தங்களை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய மனு மீது புதன்கிழமை முதல் விசாரணை நடைபெறும்''என்றார். இதற்கு சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கர்கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி டி'குன்ஹா,“உச்சநீதிமன்றம் பிரதான வழக்கான சொத்துக் குவிப்பு வழக்கிற்கு மட்டுமே தடைவிதித்துள்ளது. எனவே, மற்றகிளை வழக்குகளை தொடர்ந்து விசாரிப்பேன். அதற்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு முழு அதிகாரம் இருக்கிறது''எனக் கண்டிப்புடன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT