Last Updated : 22 Nov, 2017 02:53 PM

 

Published : 22 Nov 2017 02:53 PM
Last Updated : 22 Nov 2017 02:53 PM

புதுச்சேரியில் 5 நாட்களாக நீடித்த பிஆர்டிசி ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ்

 

புதுச்சேரியில் தொடர்ந்து 5 நாட்களாக நீடித்த பிஆர்டிசி ஊழியர்கள் வேலை நிறுத்தம் இன்று மதியம் வாபஸ் பெறப்பட்டது.

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை எனக்கூறி அதில் பணிபுரியும் ஊழியர்கள் கடந்த சனிக்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதன் காரணமாக புதுச்சேரி,காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. கடந்த இரு நாட்களாக ஊழியர்கள் போக்குவரத்துக் கழகப் பணிமனையிலேயே தங்கி உணவு சமைத்து சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து இன்று நண்பகல் சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் நாராயணசாமியை சந்தித்து எம்எல்ஏ சிவா மற்றும் ஊழியர்கள் மனு தந்தனர். அதில், "மாதந்தோறும் சரியான தேதியில் ஊதியம் வழங்க வேண்டும். இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த ஊழியர்களாக இருக்கும் ஓட்டுநர், நடத்துனர்களை தினக்கூலி ஊழியர்களாக மாற்ற வேண்டும். கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றும் 12 பெண் நடத்துநர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். புதுச்சேரி பல்கலைக்கழகத்துக்கு இயக்கிய பஸ்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இக்கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக முதல்வர் உறுதி தந்ததால் 5-வது நாளாக இன்று நடைபெற்ற போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

மதியம் முதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x