Published : 20 Nov 2017 03:56 PM
Last Updated : 20 Nov 2017 03:56 PM
மென்பட்டு உற்பத்தியில் வளர்ந்து கொண்டிருக்கும் நகரம் மேட்டுப்பாளையம் சிறுமுகை. இங்கு தயாராகும் பட்டு சேலை ரகங்களுக்கு தீபாவளி, பொங்கல் சமயங்களில் கிராக்கி கூடிவிடுவது வாடிக்கையாக உள்ளது. தற்போது கைத்தறியில் இந்த மென்பட்டு தயாரிப்பதன் நுணுக்கங்களை அறிந்து கொள்வதில் ஃபேஷன் டிசைனிங் மாணவிகளும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் நேற்று தனியார் கல்லூரி ஒன்றிலிருந்து வந்த சுமார் 100 மாணவிகள் சிறுமுகை மற்றும் ஆலாங்கொம்பு பகுதிகளில் உள்ள வெவ்வேறு கைத்தறிக்கூடங்களுக்கு குழு, குழுவாகப் பிரிந்து சென்று அங்கே இந்த சேலைகள் எப்படித் தயாராகின்றன என்று நேரில் பார்த்தும், நெசவாளர்களிடம் கேட்டும் அறிந்து கொண்டனர்.
சிறுமுகை, ஆலாங்கொம்பு பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கைத்தறி நெசவையே வாழ்வாதாரத் தொழிலாக கொண்டுள்ளனர். இவர்களால் பாரம்பரிய முறையில் முழுக்க முழுக்க மனித உழைப்பினால் நெய்யப்படும் கைத்தறி பட்டு ரகங்கள் பல முறை மத்திய மாநில விருதுகளை வென்றுள்ளது. பட்டுப் புடவை என்றாலே எடை அதிகமானவை எல்லோராலும் கட்ட இயலாது, விலையும் அதிகம் என்ற நிலையை மாற்றி மிகவும் எடை குறைந்த அணிவதற்கு எளிமையான, குறைந்த விலையில் 'சாப்ட் சில்க்' என்னும் மென்பட்டு சேலைகளை முதன்முதலாய் கைத்தறியில் உருவாக்கி அறிமுகப்படுத்தியதும் சிறுமுகை பகுதி கைத்தறி நெசவாளர்களே.
இந்த மென்பட்டு சேலை ரகங்கள் வயது வித்தியாசமின்றி பெண்களைக் கவர்ந்து விற்பனையில் முன்னிலை வகிப்பதால் இப்பகுதி நெசவுத்தொழில் தற்போது தனியிடம் பிடித்துள்ளது. இதையறிந்தே இந்த கைத்தறி சேலைகள் தயாரிப்பைக் காண வந்ததாக வந்திருந்த மாணவிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாணவிகள் சிலர் கூறுகையில், ''இன்றைய நாகரீக கலாச்சார உடைகள் மற்றும் நவீன ஆடை உருவாக்கம் குறித்து கல்லூரிகளில் ஒரு பாடத்திட்டம் உள்ளது. அதைப் பயின்று வரும் எங்களைப் போன்ற மாணவ- மாணவிகள் இந்த கைத்தறியின் வேலைப்பாடுகள் குறிந்து அறிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டிருக்கிறோம். கம்யூட்டரில் நாங்கள் டிசைன் போடும் காலத்தில், இவர்கள் இப்பவும் எவ்வித மின்சார எந்திரங்களையும் பயன்படுத்தாமல் கைத்தறி பட்டுச் சேலைகளை நெசவாளிகள் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது. பட்டு சேலைன்னா 10 ஆயிரம், 20 ஆயிரம் ரூபாய்னு விலை இருக்கும். அது வாங்க பெரிய வசதி வேணும்னெல்லாம் நினைச்சோம். இங்கே ஆயிரத்தி ஐநூறு, 2 ஆயிரத்திற்கும் கூட மென்பட்டு சேலைகள் இருப்பதும் அதிசயமாக இருக்கிறது.
தவிர, சேலையை வாங்கறோம்; கட்டறோம். அதுல இந்த கைத்தறி சேலைக்கு மட்டும் என்னடா இந்த விலைன்னு ஆச்சரியப்படறோம். இங்கே வந்து பார்த்தால்தான் தெரியுது, அதுல எவ்வளவு மனித உழைப்பு இருக்கு, கையிலயே போடற டிசைன்க எந்த அளவுக்கு தரமா இருக்குன்னு இங்கே வந்து பார்த்துத்தான் புரிஞ்சுகிட்டோம்!'' என்று தெரிவித்தனர்.
மாணவிகள் பல்வேறு விஷயங்களை நெசவாளர்களை கேட்டுப் புரிந்துகொண்டு, குறிப்புகளும் எடுத்துக்கொண்டனர். சிலர் கைத்தறியில் உட்கார்ந்து, சில டிசைன் போடும் பணிகளை செய்தும் பார்த்தனர். கைத்தறியில் பணியாற்றும் நெசவாளிக்கு அதிகமாக காலில்தான் வேலை அதிகமாக இருக்கும். அதனால் கால்கள் வீங்கியும் போகும். அதை கொஞ்சம் எளிமைப்படுத்த, கையால் மட்டுமே இயக்கக்கூடிய வித்தியாசமான கைத்தறியை செய்திருக்கிறார் காளப்பன் என்ற நெசவாளி. அவரிடமும் அது செயல்படும் விதத்தையும் கேட்டறிந்தனர் மாணவிகள்.
நெசவாளிகள் தங்கள் அனுபவத்தில் அவர்களுக்கு செயல் விளக்கம் அளித்ததோடு, நெய்தல் முதல் தங்கள் தயாரிப்புகள் கடைகளுக்கு சென்று விற்பனையாவது வரை அனைத்தையும் மாணவிகளுக்கு விளக்கினர். இன்றைய மக்களின் தேவைக்கேற்ப கைத்தறி தொழில் எப்படி தன்னை சீரமைத்துக் கொண்டது என்பது குறித்தும் இத்துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளதையும் அவர்களிடம் சில புள்ளவிவரங்களுடன் விளக்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT