Last Updated : 27 Jul, 2023 03:40 AM

 

Published : 27 Jul 2023 03:40 AM
Last Updated : 27 Jul 2023 03:40 AM

வாணியம்பாடி அருகே கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டெடுப்பு

கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு நடுகல் வாணியம்பாடி அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் தூய நெஞ்கக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் க.மோகன் காந்தி, சோளிங்கர் அரசு கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் வே.நெடுஞ்செழியன், காணிநிலம் மு. முனிசாமி, சித்த வைத்தியர் சீனிவாசன் ஆகியோர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வரலாற்று சுவடுகள் தொடர்பான கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதில், வாணியம்பாடி அருகே நடத்திய கள ஆய்வில் ஜல்லிக்கட்டு நடுகல் ஒன்றை ஆய்வுக்குழுவினர் கண்டறிந்துள்ளனர்.இது குறித்து பேராசிரியர் முனவைர் க.மோகன் காந்தி கூறியதாவது, ‘‘திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடிக்கு அடுத்த புல்லூர் கிராமத்தில் கி.பி. 15 ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு நடுகல் ஒன்று நிலத்தில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், எங்கள் ஆய்வுக்குழுவினர் அந்த இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினோம். அந்த இடத்தை கும்பல் வட்டம் என மக்கள் அழைக்கின்றனர்.

இந்த நடுகலானது 5.4 அடி உயரமும், 3.7 அடி உயரம் கொண்ட பிரமாண்டமான பலகைக் கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள வீரனின் உருவம் 3 அடியில் செதுக்கப்பட்டுள்ளது. காளை மாட்டின் உருவம் 2.7 அடி உயரத்தில் செதுக்கப்பட்டுள்ளது.

வீரனின் வலது கையில் குறுவாள் ஒன்றை வைத்துள்ளார். இடது கையில் காளையின் கொம்புகளை அவர் பிடித்துள்ளபடி உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. காளையின் கொம்புகள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. காளையின் காதின் அமைப்பும் அழகாக உள்ளது.

நடுகல்லின் மேற்பகுதி திருவாச்சி அலங்காரத்துடன் உள்ளது. வீரனின் வலது பக்கத்தில் கள்குடம் (கெண்டி) ஒன்று உள்ளது. இது இந்த வீரனுக்குப் படையலாக வைக்கப்பட்டுள்ளது. வாணியம்பாடிக்கு அருகே உள்ள புல்லூர் கிராமம் தமிழகத்தின் எல்லைப் பகுதியாகும். இதற்கு அருகே ஆந்திர மாநிலம் தொடங்குகிறது. அடர்ந்த காடுகளும், தொடர் மலைகளும் இப்பகுதியில் உள்ளதால் ஆநிரைகள் (ஆடு, மாடுகள்) வளர்ப்புப் பகுதியாக இந்த இடம் இருந்திருக்கிறது.

இங்கே மாடுகளுடன் வீரப் போர் எனப்படும் ஜல்லிக்கட்டை தமிழ் மறவர்கள் விளையாடி இருக்கிறார்கள். இந்த ஜல்லிக்கட்டில் காளையுடன் சண்டையிட்டு வெற்றிப் பெற்ற வீரனுக்கு இந்த நடுகல் நட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நடுகல்லுக்கு எந்த ஒரு வழிபாடும் இங்கு நடைபெறவில்லை.

இதற்கு முன்பு திருப்பத்தூருக்கு அருகே உள்ள அம்மணாங்கோயில் என்ற கிராமத்தில் எங்கள் ஆய்வுக்குழு ஜல்லிக்கட்டு நடுகல் ஒன்றைக் கண்டறிந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சங்க இலக்கியத்தில் கலித்தொகை நூலில் ஏறு தழுவல் (காளை மாட்டினை அடக்குதல்) குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ன. சிந்து வெளியிலும் மாட்டுடன் சண்டையிடும் வீரனின் புடைப்புச் சிற்பமும் கிடைத்துள்ளது. இன்றும் மதுரையில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் எருதுக்கட்டு என்ற பெயரில் இன்றும் இந்த வீரவிளையாட்டு நடைபெறுகிறது. தமிழரின் பண்பாட்டை இந்த ஜல்லிக்கட்டு நடுகல் தாங்கி நிற்கிறது. இது போன்ற வரலாற்று சிறப்புமிக்க நடுகல்களை மாவட்ட நிர்வாகம், தொல்லியல் துறையினர் பாதுகாத்து ஆவணப்படுத்த முன்வர வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x