Published : 26 Jul 2023 08:52 PM
Last Updated : 26 Jul 2023 08:52 PM

"பாஜக ஆட்சி தொடர்ந்தால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை யாராலும் காப்பாற்ற முடியாது" - முதல்வர் ஸ்டாலின்

திருச்சியில் நடந்த திமுக வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் உரையாற்றும் முதல்வர் ஸ்டாலின்

திருச்சி: "பாஜக ஆட்சி தொடருமானால் இந்தியாவில் மக்களாட்சியை, சமூகநீதியை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை யாராலும் காப்பாற்ற முடியாது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருச்சியில் டெல்டா மாவட்ட திமுக வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியது: "பாஜக ஆட்சி தொடருமானால் இந்தியாவில் மக்களாட்சியை, சமூகநீதியை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.மீண்டும் பாஜக ஆட்சி அமைக்குமானால், இந்தியாவில், ஜனநாயகமே இருக்காது. ஏன், தமிழ்நாடு என்ற மாநிலமோ, அதற்கான சட்டமன்றமோ, முதல்வரோ, அமைச்சர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ இருக்க மாட்டார்கள். அத்தனையையும் காலி செய்து விடுவார்கள். உள்ளாட்சி அமைப்புகள் இருக்காது. இதுதான் அனைத்து மாநிலங்களுக்கும் நடக்கும்.

புதிய நாடாளுமன்றம் கட்டியிருக்கிறார்களே எதற்கு? 888 இருக்கைகளைப் போட்டிருக்கிறார்கள். அது எதற்காக? நாடாளுமன்றத்தில் தங்களது விருப்பங்களுக்கு ஏற்ப இருக்கைகளைப் போட நினைக்கிறார்கள். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்ற பேரால் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கப் பார்க்கிறார்கள். குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை முறையாகப் பின்பற்றிய தமிழகம், கேரளா போன்ற மாநிலங்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படும். வடமாநிலங்களில் இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும்.

நாம் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுப் போனாலும், வட மாநில எம்பிக்களை வைத்து ஆட்சியைப் பிடித்துக் கொள்ளலாம் என்று தப்புக் கணக்குப் போடுகிறார்கள். தமிழகத்தின் குரலை இதன் மூலமாகத் தடுக்கப் பார்க்கிறார்கள். எனவேதான் இந்தத் தேர்தலை மிக மிக முக்கியமான தேர்தலாக நான் சொல்கிறேன்.மாநிலங்களுக்கு, பல்வேறு தேசிய இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு, பல்வேறு மொழிகளைப் பேசுபவர்களுக்கு, பல்வேறு பண்பாட்டைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான சிந்தனை கொண்ட ஒரு கட்சிதான், பாஜக. ஒற்றைக் கட்சியே இருக்க வேண்டும் என்று நினைக்கும் கட்சி அது.

ஒற்றைக் கட்சி ஆட்சி அமைந்தால், ஒரே ஒரு ஆள் கையில் அதிகாரம் போய்விடும். இன்னும் சொல்கிறேன், அவ்வாறு அமைந்தால் அது பாஜகவினருக்கே ஆபத்தான கொள்கை. அதனால்தான் பாஜக இந்தத் தேர்தலில் வீழ்த்தப்பட வேண்டும் என்று சொல்கிறோம்.இந்த முக்கியமான இலக்கை முன்னெடுக்கும் கட்சிகள் அனைவரும் இன்றைக்கு ஒன்று சேர்ந்திருக்கிறோம். 26 கட்சிகள் அடங்கிய இந்தக் கூட்டணிக்கு - Indian National Developmental Inclusive Alliance - என்று பெயர் சூட்டி இருக்கிறோம். INDIA - என்பது இந்தக் கூட்டணிக்குப் பெயர். எனவே இந்தியாவைக் காப்பாற்றப் போவது இந்த INDIA கூட்டணிதான். இதனை பிரதமராக இருக்கும் மோடி அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

பாஜகவை எதிர்க்க ஒரு வலுவான அணியை அமைத்துவிட்டார்களே என்று நினைத்து இப்போது ஏதேதோ பேசிக் கொண்டு இருக்கிறார். இந்த நோக்கத்தைப் பற்றி இப்போது அல்ல, நான் ஓராண்டு காலமாக சொல்லிக் கொண்டிருக்கிறேன். அதனால் என் மீதும் அவர்களுக்குக் கோபம். அதனால்தான் மத்தியப் பிரதேசத்துக்குப் போனாலும் திமுகவைத் திட்டுகிறார். அந்தமான் விமான நிலையத்தைத் திறந்து வைக்கப் போனாலும் திமுகவைத் திட்டுகிறார்.என்ன சொல்கிறார், வாரிசுகளுக்கான கட்சியாம். இதைக் கேட்டுக் கேட்டு புளிச்சுப் போச்சு. வேறு ஏதாவது யோசித்து கண்டுபிடித்துச் சொல்லுங்கள்.நான் இன்னும் சொல்கிறேன், இது வாரிசுகளுக்கான கட்சிதான். ஆமாம், வாரிசுகளுக்கான கட்சிதான். ஆரியத்தை வீழ்த்த வந்த திராவிடத்தின் வாரிசுகள் நாங்கள்.பெரியாரின் வாரிசுகள், அண்ணாவின் வாரிசுகள், கருணாநிதியின் வாரிசுகள் நாங்கள், இதனைத் தைரியமாக, பெருமையோடு என்னால் சொல்ல முடியும்.

பாஜக யாருடைய வாரிசு? நான் கேட்கிறேன். கோட்சேவின் வாரிசுகள்தான் நீங்கள் என்று உங்களால் தைரியமாகச் சொல்ல முடியுமா? சொல்வதற்கான தைரியம் உங்களுக்கு உண்டா? குஜராத் மாநிலத்தில் 2002-ம் ஆண்டு என்ன நடந்தது என்பதை இந்த நாடு மறக்கவில்லை. அன்று குஜராத்தில் நடந்ததை இன்று மணிப்பூர் நினைவூட்டிக் கொண்டு இருக்கிறது.

மே மாதம் தொடங்கிய வன்முறையை இன்றுவரை அந்த மாநிலத்தை ஆளும் மணிப்பூர் பாஜக அரசாலும் தடுக்க முடியவில்லை. ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசாலும் தடுக்க முடியவில்லை. வன்முறையாளர்களும், மாநிலத்தை ஆளும் மணிப்பூர் போலீஸாரும் கைகோத்துக் கொண்டு மக்களைத் தாக்குகிறார்கள் என்று நான் சொல்லவில்லை, பாஜகவை சேர்ந்த மணிப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பாவோலியன்லால் ஹொக்கிப் சொல்லி இருக்கிறார். மீண்டும் சொல்கிறேன்... இப்படிச் சொல்லி இருப்பது ஸ்டாலின் அல்ல, பாஜகவுக்கு எதிரணியில் இருப்பவர்கள் அல்ல. பாஜகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சொல்லி இருக்கிறார். ஒற்றுமையாக இருக்கும் மக்கள் மனதில் வேற்றுமையை விதைத்து, மனக்கசப்பை உருவாக்கி, வெறுப்பு அரசியல் மூலமாக அரசியல் ஆதாயம் தேட நினைத்ததன் விளைவுதான் இன்று மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

இங்கே ஒரு கொத்தடிமைக் கூட்டம், யார் என்று தெரியும், அதிமுக என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர்கள் யாராவது மணிப்பூரைப் பற்றிப் பேசினார்களா? வாய்க்கு வந்ததைப் பேசுவாரே பழனிசாமி. அவர் பேசினாரா? பேசவில்லையே. 'பாஜகவுக்கு நான் அடிமையில்லை' என்று சொல்லும் பழனிசாமி, மணிப்பூர் கொடூரத்துக்குக் காரணமான அந்த மாநில முதல்வரையோ ஒன்றிய பாஜக அமைச்சரையோ கண்டித்தாரா?

பழனிசாமியை பக்கத்தில் வைத்துக் கொண்டு ஊழல் ஒழிப்பு பற்றி பிரதமர் மோடி பேசுகிறார். நான் அப்போதே கேட்டேன், "பக்கத்தில் யாரை வைத்துக் கொண்டு நீங்கள் பேசுகிறீர்கள்?" என்று கேட்டேன். சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டு, அதற்குத் தடை கேட்டு உச்ச நீதிமன்றம் போனவர் பழனிசாமி. அவருடன் அமைச்சராக இருந்தவர்கள் மீதும் ஊழல் கறை படிந்திருக்கிறது. இந்த ஊழல் பேர்வழிகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு ஊழலைப் பற்றி பிரதமர் பேசுகிறார். பேசலாமா?

நான் இன்னும் கேட்கிறேன். கர்நாடக மாநிலத்தில் ஊழல் பாஜக அரசை, ஊழலுக்காகத்தானே அந்த மாநில மக்கள் விரட்டி அடித்தார்கள், தோற்கடித்தார்கள். அது மறந்து போய்விட்டதா?அதிமுகவினர் மீதான ஊழல் வழக்குகளைக் காட்டி அவர்களை அடிபணிய வைத்துள்ளது பாஜக கடந்த காலத்தில் தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் பாஜகவுக்கு பயந்து அடமானம் வைத்தது அதிமுக.

எனவே உரிமைகளைக் கைவிட்டவர்களும், காவு வாங்கியவர்களும் இன்றைக்குக் கைகோத்து வருகிறார்கள். இவர்களை இந்தத் தேர்தலில் முழுமையாக நாம் வீழ்த்தியாக வேண்டும். இந்தியாவின் மற்ற மாநிலங்களும் மணிப்பூர் ஆகி விடாமல் தடுத்தாக வேண்டும். தமிழை, தமிழினத்தை, தமிழக மக்களைக் காக்க வேண்டுமானால், இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பைக் காப்பாற்றியாக வேண்டும்" என்று முதல்வர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x