Published : 26 Jul 2023 07:31 PM
Last Updated : 26 Jul 2023 07:31 PM
மதுரை: குழந்தை விற்பனை வழக்கில் தொடர்புடைய செவிலியரின் பணி நீக்க உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
விருதுநகர் மாவட்டம் மாரனேரியைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவருக்கு ஏற்கெனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில் 4வது முறையாக கர்ப்பமானார். அவருக்கு ஜன. 29-ல் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை நெல்லையைச் சேர்ந்த குழந்தையில்லா தம்பதிக்கு விற்கப்பட்டது. இது தொடர்பாக பஞ்சவர்ணத்தின் தாயார் அளித்த புகாரின் பேரில் மாரனேரி போலீஸார் பாண்டீஸ்வரன், பஞ்சவர்ணம், ஜார்ஜ் தம்பதியர், செவிலியர்கள் முத்துமாரி மற்றும் அஜிதா உள்ளிட்ட பலர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அஜிதா பணி நீக்கம் செய்யப்பட்டார்.
பணி நீக்கத்தை ரத்து செய்து தன்னை மீண்டும் பணியில் சேர்க்கக்கோரி அஜிதா உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.பி.கிருஷ்ணதாஸ் வாதிடுகையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட செவிலியர் முத்துமாரி, வழக்கு பதிவு செய்த சார்பு ஆய்வாளரின் சகோதரி. அவரை காப்பாற்றும் நோக்கத்தில் மனுதாரர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ''குழந்தை விற்பனை விவகாரத்தில் மனுதாரருக்கு தொடர்பு உள்ளதா இல்லையா என்ற விவகாரத்துக்குச் செல்ல விரும்பவில்லை. அது நீதிமன்ற விசாரணையின் முடிவில் தான் தெரியவரும். அதே நேரத்தில் பணி நீக்கம் மனுதாரருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தொகுப்பூதிய பணியாளரான மனுதாரருக்கு உரிய நோட்டீஸ் கொடுத்திருக்க வேண்டும். தன்னிச்சையாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
மனுதாரர் மீது வழக்கு உள்ளது என்பது சுகாதாரத்துறையை பாதகமாக்காது. இயற்கை நீதி மீறப்பட்டுள்ளதால் மனுதாரரின் பணி நீக்க நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரை உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும். மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குநர் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கலாம்.'' இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT