Published : 26 Jul 2023 05:03 PM
Last Updated : 26 Jul 2023 05:03 PM
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே கொடகரை மலைக் கிராமத்துக்குப் பேருந்து வசதியில்லாததால், வனத்துறை வாகனத்தில் கூட்ட நெரிசலுடன் 33 கிமீ தூர பயணத்துக்கு ரூ.80 கட்டணம் செலுத்தும் நிலையுள்ளது.
எனவே, சிற்றுந்துகள் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தேன்கனிக்கோட்டையிலிருந்து 33 கிமீ தூரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் கொடகரை மலைக் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மக்களின் பிரதான தொழிலாக விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் தேன் எடுத்தல் இருந்து வருகிறது.
இப்பகுதி மக்கள் மருத்துவம், கல்வி, அடிப்படைத் தேவைக்கு தேன்கனிக்கோட்டைக்கு வந்து செல்கின்றனர். ஆனால், இக்கிராமத்துக்குப் பேருந்து வசதி இல்லை. இதனால், தேன்கனிக்கோட்டையிலிருந்து அய்யூர் வழியாக பெட்டமுகிலாளம் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறி பாதி வழியில் உள்ள கொடகரை கூட்டு ரோட்டில் இறங்கி அங்கிருந்து 11 கிமீ தூரம் நடந்து கொடகரைக்குச் செல்கின்றனர்.
இந்நிலையைப் போக்க கடந்த 2015-ம் ஆண்டு கொடகரை கிராமத்துக்கு புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், சாலை அதிக வளைவுகளும், தாழ்வான பகுதியாக இருப்பதால் பேருந்துகள் இயக்க முடியவில்லை. இதையடுத்து, தேனக்கனிக்கோட்டை வனத்துறை சார்பில் 23 பேர் பயணிக்கும் வேன் இயக்கப்படுகிறது. இந்த வேன் கொடகரையில் காலை 9.10 மணிக்கு புறப்பட்டு காலை 12 மணிக்கு தேன்கனிக்கோட்டைக்கு வருகிறது.
தேன்கனிக் கோட்டையிலிருந்து மதியம் 2.10 மணிக்கு புறப்பட்டு மாலை 4 மணிக்கு கொடகரைக்குச் செல்கிறது. இந்த ஒரு வாகனம் மட்டுமே இவர்களின் போக்குவரத்துத் தேவையைப் பூர்த்தி செய்வதால், 23 பேர் செல்ல வேண்டிய வேனில் 50 பேர் பயணிக்கும் நிலையுள்ளது. இந்த நிலையைப் போக்கச் சிற்றுந்துகளை இயக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக மலைவாழ் மக்கள் கூறியதாவது: அடர்ந்த வனப்பகுதியில் வசித்து வரும் நாங்கள் மருத்துவமனைக்கும் தேன்கனிக் கோட்டைக்கு செல்ல வேண்டும். பேருந்து வசதியில்லாததால் வனத்துறை வேனில் நெரிசலுடன் பயணம் செய்கிறோம். ஒரு நபருக்கு ரூ.80 கட்டணம் வசூலிக்கின்றனர். மேலும், சுமைகளுக்கு எடைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
வனத்துறை வாகனத்தில் அதிகம் பேர் செல்வதால் சாலை வளைவு மற்றும் தாழ்வான பகுதியில் அச்சத்துடன் கடக்கும் நிலையுள்ளது. எனவே, அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் கொடகரைக்குச் சிற்றுந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT