Published : 26 Jul 2023 03:32 PM
Last Updated : 26 Jul 2023 03:32 PM

வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் இருள் சூழ்ந்த மகப்பேறு பிரசவ வார்டு கட்டிடம் - பொதுமக்கள் அச்சம்

வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு மற்றும் பிரசவ பிரிவு கட்டிடம் இருளில் மூழ்கியுள்ளன.

வேலூர்: வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் ‘ஹைமாஸ்’ விளக்கு எரியாததால் இரவு நேரத்தில் அங்குள்ள மகப்பேறு மற்றும் பிரசவ வார்டு வளாக பகுதியில் பொதுமக்கள் நடமாட அச்சமாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

வேலூர் நகரின் மையப்பகுதியில் இயங்கி வரும் பென்ட் லேண்ட் அரசு மருத்துவமனை நூற்றாண்டுகள் பழமையானது. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் சிறிய மருந்தகமாக செயல்பட்ட நிலையில் பொதுமக்களுக்கான சுகாதார சேவையை விரிவாக்கம் செய்யும் வகையில் சிறிய அளவிலான மருத்துவமனையாக கடந்த 1915-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது.

அப்போதைய மெட்ராஸ் மாகாண கவர்னர் பாரோன் பென்ட்லேண்ட் பரிந்துரையின் பேரில் தொடங்கப்பட்ட மருத்துவமனையை அவரே திறந்து வைத்தார். அன்று முதல் பென்ட்லேண்ட் மருத்துவமனையாக செயல்பட தொடங்கியது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையாக மிகச் சிறப்பாக செயல்பட தொடங்கியது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையாக செயல்பட்டு வந்த பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வளாகம் சுமார் 5 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அனைத்து சிகிச்சை பிரிவுகளுடன் செயல்பட்டு வந்த நிலையில் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையாக தரம் உயர்த்தப்பட்டது.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக செயல்பட போதிய இட வசதி இல்லாத நிலையில் வேலூர் நகரில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள அடுக்கம்பாறை பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. பென்ட்லேண்ட் அரசு மருத்துவ மனையில் இருந்த மருத்துவ தள வாடங்கள் அனைத்தும் அடுக்கம் பாறை யில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.

இதனால், பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வளாகம் புறநோயாளிகள் மருத்துவ பிரிவுடன் தனது செயல்பாட்டை நிறுத்திக் கொண்டது. பென்ட் லேண்ட் அரசு மருத்துவமனை செயல்படாத நிலையில் வேலூர் நகரில் உள்ள மக்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் சிரமப்பட்டனர்.

மேலும், 10 கி.மீ தொலைவுக்கு பேருந்தில் பயணித்து அடுக்கம் பாறைக்கு செல்ல வேண்டி இருந்ததால் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் தாலுகா அளவிலான அரசு மருத்துவமனையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, புறநோயாளிகள் பிரிவுடன் மகப்பேறு, குழந்தைகள் நலம், எலும்பு முறிவு, காது, மூக்கு, தொண்டை, கண் சிகிச்சை பிரிவுடன் செயல்பட்டு வருகிறது. சுமார் 10-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 20-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியாற்றும் பென்ட்லேண்ட் மருத்துவமனையை நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்தது.

ஏனென்றால், போதிய அளவுக்கு இடவசதி இருப்பதால் நகருக்குள்ளேயே ஒரு அரசு மருத்துவமனை இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இந்த எதிர்பார்ப்பும் நிறைவேற்றப்படும் வகையில் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக, ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், நவீன வசதிகளுடன் கூடிய 7 தளங்கள் கொண்ட வளாகம் கட்டப்பட உள்ளன. இதற்காக, பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்கள் அகற்றப்பட்டு, பழமையான கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. இதில், மகப்பேறு மற்றும் பிரசவ கட்டிடம் முன்பாக மரக்கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளன. அத்துடன், அங்குள்ள ‘ஹைமாஸ்’ விளக்கு எரியாமல் இருப்பதால் இருள் சூழ்ந்த பகுதியில் மகப்பேறு - பிரசவ வார்டு செயல்படுகிறது.

இதனால், தினசரி மாலை 6 மணிக்கு பிறகு அந்த பகுதியில் பாம்பு வருமா? விஷப் பூச்சிகள் இருக்குமா? என பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். அந்த கட்டிடத்தின் வெளியே இருக்கும் ஒரே ஒரு விளக்கும் வெளிச்சம் போதியளவில் இல்லை என்பதால் ஹைமாஸ் விளக்கை எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள், உறவினர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அதே போல், பிரசவத்துக்கு வரும் கர்ப்பிணிகளின் உறவினர்கள் தங்குவதற்கு போதிய வசதிகள் இல்லாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மருத்துவர்கள் தரப்பில் விசாரித்த போது, ‘‘இதுசம்பந்தமாக, பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x