Published : 26 Jul 2023 08:00 AM
Last Updated : 26 Jul 2023 08:00 AM
சென்னை: ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் பேருந்து நிலையம் கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்ய வீட்டுவசதி வாரியம் முயற்சிப்பதாக வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, இந்து தமிழ் திசை நாளிதழின் உங்கள் குரல் சேவையைத் தொடர்பு கொண்டு தரணிதரன் என்ற வாசகர் கூறியதாவது: ஆவடி வீட்டுவசதி வாரியம் 116 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு, அங்கு பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைக்கும் என வீட்டுவசதி வாரியம் உறுதி மொழி அளித்து மக்களுக்கு வீட்டுமனைகளை விற்பனை செய்தது. தற்போது 8 ஆயிரம் வீடுகளில் 30 ஆயிரம் மக்கள் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில், இங்கு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு 28 கிரவுண்ட் பரப்பளவில் பேருந்து நிலையம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டது. அதேபோல், நூலகம் அமைக்க 3,625 சதுர அடியும், மருத்துவமனைக்கு 4,400 சதுர அடியும், தபால் நிலையத்துக்கு 3,600 சதுர அடியும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த இடங்கள் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு ஒதுக்கப்படாததால் கடந்த 30 ஆண்டுகளாக எவ்வித பயன்பாடும் இன்றி உள்ளது.
இந்நிலையில், பேருந்து நிலையம் அமைக்க ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வீட்டுமனைகளை அமைக்க வீட்டுவசதி வாரியம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக, அந்த இடத்தை மனைகளாக பிரித்து கல் நடும் முயற்சியில் இறங்கி உள்ளது. இந்த முயற்சியை வீட்டுவசதி நிர்வாகம் கைவிட வேண்டும். இவ்வாறு தரணிதரன் கூறினார்.
இதுகுறித்து, வீட்டுவசதி வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் பொதுப் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் விரைவில் சம்மந்தப்பட்ட துறைகளிடம் ஒப்படைக்கப்படும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT