Published : 26 Jul 2023 01:02 PM
Last Updated : 26 Jul 2023 01:02 PM
சென்னை: கணவன் சேர்க்கும் சொத்தில் மனைவிக்கும் சம பங்கு கிடைக்க சட்டம் நிறைவேற்றம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த ஜூன் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, கணவர் வருமானம் ஈட்டி சொத்து சம்பாதிக்கிறார் என்றால், அதற்கு உகந்த சூழலை வீட்டையும், குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனிக்கிற மனைவி செய்கிறார் என்பதை சுட்டிக்காட்டி, திருமணத்துக்குப் பின் சேரும் கணவரின் சொத்துகளில் மனைவிக்கு சம பங்கு உண்டு என்று குறிப்பிடுகிறது. வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்ப்பை வழங்கியமைக்காக நீதியரசர் கிருஷ்ணன் ராமசாமியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு பாராட்டுகிறது.
மனைவியின் வீடுசார் வேலை கணவன் செய்வதை போல எட்டு மணி நேர வேலை அல்ல, மாறாக நாள் முழுவதும் அவர் குடும்பத்திற்காக உழைக்கிறார் என்பதே உண்மை. கணவர் தன் வருமானத்தில் சொத்து சேர்ப்பதற்கு மனைவியின் உழைப்பும் காரணம். தனது கனவுகளை தியாகம் செய்து, வேலைவாய்ப்பையும் நழுவ விட்டு, வாழ்க்கை முழுவதையும் குடும்பத்துக்காக குழந்தைகளுக்காக மனைவி அர்ப்பணிக்கிறார். பிறகு கணவன் சம்பாதிக்கும் சொத்தில் அவருக்கு பங்கு இல்லை என எப்படி சொல்ல முடியும்?
மனைவியின் உழைப்பை மதிப்பற்றதாக எப்படி பார்க்க முடியும் என்பன போன்ற வாதங்களை உயர்நீதிமன்றம் முன்வைத்து குறிப்பிட்ட வழக்கு மனைவிக்கும் சொத்தில் சம பங்கு இருக்கிறது என்பதை நிறுவுகிறது. கணவர் வருமானம் ஈட்டுவதும், மனைவி குடும்பத்தை பராமரிப்பதும் இரண்டுமே குடும்ப நலனுக்காக தான். இதன் மூலம் கிடைக்கும் பயனிலும் இருவருக்கும் பங்கு உண்டு.
எனவே, திருமணத்துக்குப் பின் கணவன் சேர்க்கும் சொத்துகளில் மனைவிக்கும் சம பங்கு உள்ளது என்பதே உயர் நீதிமன்ற தீர்ப்பின் சாரம். பெண்கள் இயக்கங்கள் நீண்ட காலமாகவே இதனை சட்டமாக்க வேண்டும் என கோரி வந்துள்ளன. தீர்ப்பு என்கிற நிலையிலேயே நிறுத்தப்பட்டால், அது குறிப்பிட்ட வழக்குக்கு மட்டுமே பொருந்தும். தீர்ப்பின் அடிப்படையில் சட்டம் நிறைவேற்றப்பட்டால்தான் அனைவருக்கும் பொருந்தும்.
தமிழக அரசு, இத்தீர்ப்பின் அடிப்படையில், திருமணத்துக்குப் பின் சேரும் மொத்த சொத்துகளில் மனைவிக்கு சம பங்கை உறுதி செய்யும் சட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு, தமிழக அரசை வலியுறுத்துகிறது" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT