Published : 26 Jul 2023 08:15 AM
Last Updated : 26 Jul 2023 08:15 AM
பல்லாவரம்: பல்லாவரம் - குன்றத்துார் சாலையில், பல ஆண்டுகளாக நிலவி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், நிலுவையில் உள்ள அரசாணையை வெளியிட்டு, நான்கு வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
பல்லாவரம்- குன்றத்துார் சாலை வாகன போக்குவரத்து, ஜிஎஸ்டி சாலைக்கு நிகராக மாறிவிட்டதால், ‘பீக் ஹவரில்' கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதையடுத்து, இந்த சாலையை நான்கு வழிப்பாதையாக மாற்ற திட்டமிடப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. ஆனால் நிலம் கையகப்படுத்தும் பணி இன்னும் முழுமையாக முடியவில்லை. இதனால் சாலை விரிவாக்க பணி தாமதமாகி, பொதுமக்கள் அவதியடைவது தொடர்ந்து நடந்து வருகிறது.
நிலம் கையகப்படுத்துவதில் வருவாய்த்துறை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிப்பு செய்வதால், பல்லாவரம் - குன்றத்தூர் சாலை விரிவாக்க பணி கேள்விக் குறியாகி உள்ளது. மொத்தம், 6.8 கி.மீ. தூரம் பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் இருந்து, குன்றத்தூர் வழியாக, பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளை இணைக்கும், மிக முக்கிய சாலையாக இது உள்ளது. சாலை விரிவாக்க பணிகளை மக்கள் பிரதிநிதிகள் முயற்சி எடுத்து துரிதப்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அனகாபுத்தூரை சேர்ந்த மருத்துவர் ஏ.வி.குமார் கூறியதாவது: பல்லாவரம் - குன்றத்தூர் சாலை நெரிசல் கிட்டத்தட்ட, 30 ஆண்டுகளாக நீடித்து வரும் பிரச்சினை ஆகும். இப்பிரச்சினைக்கு, சாலையை விரிவாக்கம் செய்வது மட்டுமே தீர்வு. நான்கு வழிச்சாலையாக மாற்ற அனைத்து தகுதிகள் இருந்தும், பல்லாவரம் - குன்றத்தூர் சாலை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
இச்சாலையில் இரண்டு நிமிடத்துக்கு ஒரு மாநகர பேருந்தும், அதிக கனரக வாகனங்களும் ஆயிரக்கணக்கான இலகுரக வாகனங்களும் செல்வதால், விபத்துகள் நிகழ்வது தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து மிகுந்த நேரத்தில் மட்டுமின்றி, எப்போதும் வாகன நெரிசல் அதிகமாக உள்ளது. காஞ்சி, செங்கை இரண்டு மாவட்டங்களையும் இணைக்கும் முக்கிய சாலையாக, பல்லாவரம் - குன்றத்தூர் சாலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி கூறும்போது, இரண்டு சாலைகளையும் நான்கு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என அதிமுக ஆட்சி காலத்தில் இருந்து, பேரவையில் தொடர்ந்து பேசி வருகிறேன். முதல்கட்ட பணிக்கு, ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டது. பின், அப்படியே தொய்வு ஏற்பட்டது. தற்போது, இச்சாலைகளை நான்கு வழிப்பாதையாக மாற்ற நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. எந்தெந்த பகுதிகளில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது என்பது குறித்து, விரைவில் அரசாணை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது: நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. நில எடுப்பு செய்து எங்களிடம் ஒப்படைத்தால் தான், சாலை விரிவாக்க பணிகளுக்கான அடுத்த கட்டத்துக்கு நாங்கள் செல்ல முடியும். இவ்வாறு கூறினர்.
வருவாய்த்துறையினர் கூறியதாவது: ஈசா- பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய மூன்று கிராமங்களில் நில எடுப்பு பணி செய்ய வேண்டி உள்ளது. சுமார் ஒரு ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டி உள்ளது. இதன்படி 250 உரிமையாளர்கள் இருப்பதாக கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே நிலம் எடுப்பு செய்வதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது எந்தெந்த இடங்களில் நில எடுப்பு செய்யப்பட உள்ளது ௭ன்பது குறித்து, விரிவாக அறிக்கை தயாரித்து, மாவட்ட நிர்வாகம் மூலம் நில நிர்வாக ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எந்தெந்த சர்வே நம்பரில் நிலம் எடுக்கப்பட உள்ளது என்பது குறித்து அரசாணை வெளியிட்ட பின், மீண்டும் நில உரிமையாளர்களின் ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்தி, இழப்பீடு தொகை நிர்ணயம் செய்து, உரிய இழப்பீடு வழங்கப்படும். அரசாணைக்குப் பின்பு தான் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள இயலும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT