Published : 26 Jul 2023 05:45 AM
Last Updated : 26 Jul 2023 05:45 AM

மாணவர்களுக்கு விளையாட்டு மீதான ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் - அமைச்சர் உதயநிதி, அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நேற்று நடைபெற்ற ‘முதலமைச்சர் கோப்பை - 2023’ மாநில அளவிலான போட்டிகள் நிறைவு விழாவில், 27-வது தேசிய மகளிர் கால்பந்து போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.60 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். உடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டு துறையின் கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்டோர்.

சென்னை: விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிப்பதைப் போல, விளையாட்டு மீதான ஆர்வத்தை அனைத்து மாணவ, மாணவியருக்கும் ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் கோப்பை போட்டிகளுக்கான பரிசு வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் வழங்கினார்.

முதல்வர் கோப்பை 2023-க்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஜூன் 30-ம் தேதி தொடங்கியது. மாவட்டம், மாநில அளவில் இப்போட்டிகள் நடைபெற்று முடிந்தன.இந் நிலையில், மாநில அளவிலான போட்டிகளின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெற்ற சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு பரிசுக் கோப்பைகளை வழங்கினார்.

இதுதவிர, 27-வது தேசிய மகளிர் கால்பந்து போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக அணியின் 25 வீராங்கனைகளுக்கு ரூ.60 லட்சத்துக்கான ஊக்கத்தொகையையும் வழங்கி னார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தின் தொன்மையான பாரம்பரிய விளையாட்டுகளான கபடி மற்றும் சிலம்பாட்டம் சேர்க்கப்பட்டுள்ளன.

முந்தைய காலங்களில் பள்ளி, கல்லூரிகள் என 2 பிரிவுகளில் மட்டுமே விளையாட்டு போட்டிகள்நடைபெற்று வந்தன. இப்போது மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என்ற பிரிவுகள் இணைக்கப்பட்டுள்ளன.

ரூ.50.86 கோடி ஒதுக்கீடு: முதல்வர் கோப்பை போட்டிகளை நடத்துவதற்கு ரூ.50.86 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியது. இதில் பரிசுத் தொகை மட்டும் ரூ.28.30 கோடியாகும்.

மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில், 3.70 லட்சம் வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். மண்டல அளவி லான போட்டிகளில் 27,054 பேர் பங்கேற்றுள்ளனர். இவர்களை வைத்து மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னையில் மட்டும் 17 இடங்களில் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகள் மட்டும் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்டுள்ளன. 3.70 லட்சம் பேர் பங்கேற்றது முதல்வர் கோப்பைக்கான வெற்றியாகக் கருதுகிறேன்.

மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒற்றையர் போட்டியாக இருந்தால் அதிகபட்சம் ஒரு லட்சம், குழு போட்டிக்கு அதிகபட்சம் ரூ.9 லட்சம் பரிசுத் தொகை பெறும் மாபெரும் போட்டியாக இது அமைந்துள்ளது.

‘டீம் ஸ்பிரிட்’ என்று விளையாட்டுக் களத்தில் சொல்வார்கள். விளையாட்டுப் போட்டிகளை நடத்தும்போதும், பல்வேறு துறையினருடன் இணைந்து செயல்படக்கூடிய இத்தகைய ‘டீம் ஸ்பிரிட்’ தேவை. அந்த வகையில், போட்டிகளை நடத்துவதற்கான சிறப்பான சூழலை உருவாக்குவதில் நமது அரசு நற்பெயரை பெற்றிருக்கிறது.

மாநில அளவில் பல போட்டிகளில் பங்கேற்றுள்ள நீங்கள், இனி வருங்காலத்தில் இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிப்பதைப் போல், விளையாட்டு மீதான ஆர்வத்தை அனைத்து மாணவ, மாணவியருக்கும் ஏற்படுத்த வேண்டும், வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி மற்றும் அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.

நிகழ்ச்சியில், துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச்செயலர் சிவ்தாஸ்மீனா, விளையாட்டுத் துறை செயலர் அதுல்யமிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எங்களுக்கும் ‘டீம்’ ஸ்பிரிட்!’: போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரி்சு வழங்கி முதல்வர் பேசும்போது, சமீபத்தில் எதிர்க்கட்சிகள் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உருவாக்கிய ‘இண்டியா’ என்ற அணி குறித்து பேசினார். அப்போது, ‘‘விளையாட்டு வீரர்களான நீங்கள் மட்டுமல்ல; இந்தியாவுக்காகத் தான் நாங்களும் பாடுபடுகிறோம். எங்கள் அணியும் ‘இண்டியா’ அணிதான். அதன் வெற்றிக்காகத்தான் நாங்களும் ஒருங்கிணைந்து, ‘டீம்ஸ்பிரிட்டுடன்’ பாடுபடுகிறோம்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x