Published : 28 Nov 2017 07:58 PM
Last Updated : 28 Nov 2017 07:58 PM
எந்த அணியிலும் இல்லாத நான் எப்படி அணி மாறியதாக கூற முடியும், அணி மாறாத நான் தினகரனிடமும் பேசவில்லை, இரட்டை இலை இருக்கும் பக்கம்தான் நானிருப்பேன் என நவநீதகிருஷ்ணன் எம்.பி. பேட்டி அளித்தார்.
நேற்று மாலை திடீரென தினகரன் ஆதரவு எம்.பி.க்கள் நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த், கோகுல கிருஷ்ணன் ஆகிய மூவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜிலா சத்யானந்த் இரட்டை இலை இருக்கும் பக்கம்தான் நாங்கள் இருப்போம் என்று தெரிவித்தார்.
இது குறித்து 'தி இந்து; தமிழ் இணையதளம் சார்பில் நவநீத கிருஷ்ணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
நீங்கள் திடீரென அணி தாவியதற்கு என்ன காரணம்?
நான் அணி தாவியதாக யார் சொன்னது. நான் எந்த அணியிலும் இல்லை. நான் அனைவரிடமும் பழகுவேன். இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்கு நான் இருப்பேன். முதல்வர் பழனிசாமியை பலமுறை சந்தித்துள்ளேன்.
நீங்கள் மூன்று பேரும் தன்னிடம் சொல்லிவிட்டுத்தான் எடப்பாடி அணிக்கு சென்றதாக டிடிவி தினகரன் கூறியுள்ளாரே?
நான் யாரையும் சந்திக்கவில்லை. டிடிவி தினகரனிடம் பேசவே இல்லை. அவரும் என்னிடம் பேசவில்லை. அவரிடம் அனுமதியும் வாங்கவில்லை. நான் எந்த அணியிலும் இல்லாத போது எப்படி அவரை சந்தித்து அனுமதி வாங்கினேன் என்று கூற முடியும்.
ஆரம்பம் முதலே நீங்கள் மூன்று பேரும் டிடிவி தினகரன் அணியாகத்தானே அறியப்பட்டீர்கள்?
நான் எந்த அணியும் இல்லை. நான் எல்லோருடனும் இருப்பவன். எல்லோரும் அதிமுகவில்தானே இருக்கிறார்கள். இப்ப அவர்கள் அதிமுகவில் இல்லை என்கிறார்கள். நான் தமிழ்நாட்டின் நலனுக்காக, அதிமுகவுக்காக நாடாளுமன்றத்தில் வாதாடி வருபவன். எனக்கு இவர் வேண்டியவர் அவர் வேண்டியவர் என்று எதுவும் இல்லை. என்னுடைய நிலைப்பாட்டைப் பற்றி தெளிவாக இருக்கிறேன். இரட்டை இலை இருக்கும்பக்கம் நான் இருக்கிறேன்.
இதே போன்று மற்ற எம்.பி.க்கள் விஜிலா சத்யானந்த், கோகுல கிருஷ்ணன் கருத்தையும் எடுத்துக்கொள்ளலாமா?
அவர்கள் கருத்து பற்றி எனக்குத்தெரியாது. என்னைப் பொறுத்தவரை நான் எல்லோருக்கும் பொதுவானவன். தேர்தல் ஆணையத்தில் கூட என் கருத்தை தனியாகத்தான் சொன்னேன். இரட்டை இலை சின்னத்தில் கூட என் கருத்தை தனியாகத்தான் வைத்து வாதாடினேன்.
தேர்தல் ஆணையத்தில் வாதாடும் போது யாருக்கு சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வாதாடினீர்கள்?
சட்டப்படி யாருக்கு கிடைக்க வேண்டுமோ அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று என் கருத்தை எடுத்து வைத்தேன்.
சட்டப்படி நீங்கள் யாருக்கு கிடைக்க வேண்டும் என்று வாதாடிய அணிக்குத்தான் இப்போது கிடைத்துள்ளதா?
அதை நான் கூற முடியாது. நான் வாதாடியதை எடுத்து வைத்த கருத்தை கூற முடியாது அல்லவா.
நீங்கள் இப்போது எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளலாமா?
நான் எந்த அணியிலும் இல்லை. இரட்டை இலை எங்கிருக்கிறதோ அங்குதான் நான் இருப்பேன். இருக்க முடியும். அரசியலுக்கு வந்ததால் பல நல்ல நட்புகளை நான் இழந்துவிட்டேன். பலருக்கும் பகையாக வேண்டிய சூழ்நிலையில் தான் இருக்கிறேன். இதுதான் எனது நிலை.
இவ்வாறு நவநீதகிருஷ்ணன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT