Published : 23 Nov 2017 10:42 AM
Last Updated : 23 Nov 2017 10:42 AM

தமிழ்நாட்டில் முதல்முறையாக ரூ.9.50 கோடியில் சென்னையில் 378 இடங்களில் ‘சைக்கிள் ஷேரிங்’ திட்டம்: 4976 சைக்கிள்களுடன் செயல்படுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை

காற்று மாசுவை குறைக்கவும், உடல்நலத்தை பாதுகாக்கவும் சென்னை மாநகராட்சி சார்பில் ‘சைக்கிள் ஷேரிங்’ திட்டம் மாநகரம் முழுவதும் 378 நிலையங்களில் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

உலகில் பல்வேறு நாடுகளில் தற்போது ‘சைக்கிள் ஷேரிங்’ திட்டம் பிரபலமடைந்து வருகிறது. லண்டன், பாரீஸ், நியூயார்க், மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பொதுமக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டம் விரைவில் சென்னையில் செயல்படுத்தப்பட உள்ளது.

நாட்டில் உள்ள மாநகராட்சிகளிலேயே முதல் முறையாக ‘மோட்டார் அல்லாத வாகன போக்குவரத்து கொள்கை’யை சென்னை மாநகராட்சி உருவாக்கியுள்ளது. அதன்படி, தியாகராயநகர் பாண்டிபஜார், பாந்தியன் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் நடந்து செல்வோருக்கு உகந்த நடைபாதைகளை சென்னை மாநகராட்சி அமைத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ‘சைக்கிள் ஷேரிங்’ திட்டத்தை செயல்படுத்த உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்துக்கான நிர்வாக அனுமதியை மாநகராட்சி நிர்வாகம் அண்மையில் வழங்கியுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில் சைக்கிள் பயணம் குறைந்துவிட்டது. தற்போது உள்ள போக்குவரத்து வகைகள் அனைத்துமே, காற்று மாசுவை ஏற்படுத்தக்கூடியவை. அதனால் மாநகரில் காற்று மாசுவை குறைக்கும் விதமாகவும், நீரிழிவு நோய், உடல் பருமன் போன்ற பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்கவும், கட்டுடலை ஏற்படுத்தவும் மாநகராட்சி சார்பில் ‘சைக்கிள் ஷேரிங்’ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

திட்டத்தின் பயன்:

இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, ஒரு நபர் வாடகை ஆட்டோ மற்றும் காரில் செல்வது குறைந்து சென்னையில் போக்குவரத்து நெரிசலும் குறையும். அதன் மூலம் வாகனங்களில் இருந்து வெளியேறி காற்றில் கலக்கும் கரித்துகள்களின் அளவு குறைந்து சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.

திட்டம் செயல்படும் முறை:

இத்திட்டதின்படி, மாநகரம் முழுவதும் முக்கிய பள்ளிகள், கல்லூரிகள், மெட்ரோ ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என 378 இடங்களில் ‘சைக்கிள் ஷேரிங்’ நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. அவற்றில் மொத்தம் 4 ஆயிரத்து 976 சைக்கிள்கள் நிறுத்தப்பட உள்ளன. இந்த சைக்கிள்கள் ஒவ்வொன்றும் சுமார் ரூ.12 ஆயிரம் விலையில் நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்டதாக இருக்கும். ஸ்மார்ட் கைபேசியில் இருந்து பிரத்தியேக செயலி மூலம், சைக்கிள் மீது உள்ள குறியீட்டை ஸ்கேன் செய்து சைக்கிளை எடுத்துக்கொள்ளலாம். பணமில்லா பரிவர்த்தனை முறையில், கைபேசி செயலி மூலமாகவே கட்டணம் பெறப்படும். கட்டணம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. இத்திட்டத்துக்கு ரூ.9 கோடியே 50 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மாநகராட்சி நிர்வாகம் 378 ‘சைக்கிள் ஷேரிங்’ நிலையங்களை மட்டுமே ஏற்படுத்தி கொடுக்கும். திட்டத்துக்கான முதலீடுகள் அனைத்தையும் ‘சைக்கிள் ஷேரிங்’ சேவை வழங்கும் ஒப்பந்ததாரர் மேற்கொள்வார். அங்கு சைக்கிளை நிறுத்துவது, சைக்கிளை பராமரிப்பது, சைக்கிள் பாதுகாப்பு, கட்டணம் வசூலிப்பது, அந்த இடத்தை பாதுகாப்பது, பராமரிப்பது உள்ளிட்டவை அனைத்தும் சேவை வழங்கும் ஒப்பந்ததாரரின் முழு பொறுப்பாகும்.

இத்திட்டத்துக்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஒப்பந்தாரர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி, தெளிவுபெற்று வருகின்றனர். குறைந்த வாடகையில் சைக்கிள் வழங்கும் ஒப்பந்ததாரருக்கு ‘சைக்கிள் ஷேரிங்’ ஒப்பந்தம் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் ஒருவர், ஒரு நிலையத்தில் இருந்து சைக்கிள் எடுத்துக்கொண்டு பல கிமீ சென்று அங்குள்ள நிலையத்தில் விட்டுவிடலாம். எடுத்த இடத்திலேயே விட வேண்டிய அவசியம் இல்லை. வாடகை கார், ஆட்டோக்கள் செல்லாத தெருக்களில் கூட சைக்கிளில் செல்ல முடியும். இத்திட்டம் பொதுமக்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x