Published : 07 Nov 2017 01:11 PM
Last Updated : 07 Nov 2017 01:11 PM
கந்துவட்டியால் பாதிக்கப்பட்டோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் தங்களுக்கு சிக்கல் எனக் கருதும் கந்து வட்டி கும்பல்கள், போலீஸாரிடமிருந்து தப்பிக்க கடன் பெற்றவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடருவது அதிகரித்து வருகிறது.
கந்து வட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இசக்கிமுத்து என்பவர் தனது மனைவி, 2 குழந்தைகளுடன் தீக்குளித்து இறந்தார்.இதையடுத்து கந்து வட்டி புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர்கள், காவல் அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டோர் காவல்நிலையங்களில் புகார் தெரிவிப்பது கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக காவல் ஆணையர், மாவட்ட கண்காணிப்பாளர்கள் அலுவலகங்களில் கந்துவட்டி புகார் தொடர்பான மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த காவல்நிலையங்களுக்கு உத்தரவிடப்படுகிறது. இதன் காரணமாக கந்துவட்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகளும், கைதுகளும் அதிகரித்துள்ளன. இதுபோன்ற சூழலில், போலீஸாரிடம் இருந்து தப்பிக்க, வட்டிக்கு கடன் வாங்கியவர்கள் தங்களிடம் கையெழுத்திட்டு நிரப்பப்படாமல் கொடுத்த புரோ நோட்டுகள், வங்கி காசோலைகள், வெற்று பேப்பர்களை ஆவணங்களாக பயன்படுத்தி, அவற்றில் வேண்டிய தொகையை நிரப்பி நீதிமன்றங்களை கந்துவட்டிக்காரர்கள் அணுகி வருகின்றனர். மதுரை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் கடன் வாங்கியவர்கள் கொடுத்த வங்கி காசோலை, புரோ நோட்டு, பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி கந்துவட்டி கும்பல்கள் வழக்கு தொடரும் போக்கு அதிகரித்துள்ளது.
இது குறித்து மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் கூறியது: பெரும்பாலும் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் புரோ நோட்டு, பத்திரம், வங்கி காசோலை ஆகியவற்றை வாங்கிக் கொண்டே பணம் கொடுக்கின்றனர். அவசரத்துக்கு கடன் வாங்குவோர், நிரப்பப்படாத ஆவணங்களில் கையெழுத்திட்டுத் தருவது பற்றி அப்போதைக்கு கவலைப்படுவதில்லை. ஆனால், பிரச்சினை எழும்போது, இந்த ஆவணங்களை தங்களுக்கு சாதகமாக கந்துவட்டிக்காரர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
பாதிக்கப்பட்டோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாலும், ஆவணங்கள் அடிப்படையில் நீதிமன்றத்தில் தீர்த்துக் கொள்கிறோம் என்று கடன்கொடுத்தோர் கூறும்போது, ஓரளவுக்கு மேல் போலீஸாரால் தலையிட முடியாத சூழல் ஏற்படுகிறது. இந்நிலையில், தற்போது கந்துவட்டியால் பாதிக்கப்பட்டோர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிப்பதற்கு முன்னதாக, அவர்கள் மீதே நீதிமன்றத்தில் கடன்கொடுத்தோர் வழக்கு தொடரும் போக்கு அதிகரித்துள்ளது. இதன்மூலம், காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டால், ஏற்கெனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாகக் கூறி கந்துவட்டிக்காரர்கள் தப்பித்துவிடுகின்றனர். தினமும் 10-க்கும் மேற்பட்ட செக், புரோ நோட்டு மோசடி தொடர்பான மனு நீதிமன்றத்தில் தாக்கலாகி வருகிறது.
எனவே, கந்துவட்டியால் பாதிக்கப்பட்டோர் எவ்வித சமரசத்துக்கும் இடம்தராமல் காவல் நிலையத்தில் புகார் தர வேண்டும். மேலும், பணம் கொடுப்பவர் ஆவணங்களின் அடிப்படையில் நீதிமன்றதை முதலில் நாடுவதற்குள், கந்துவட்டியால் பாதிக்கப்படுவோர் நீதிமன்றங்களை அணுகினால் சாதகமான முடிவு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT