Published : 22 Nov 2017 08:53 AM
Last Updated : 22 Nov 2017 08:53 AM
உயிருடன் இருப்பவருக்கு டிஜிட்டல் பேனர் வைக்கக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவால் டிஜிட்டல் பேனர் தொழில் நெருக்கடியை சந்தித்துள்ளது. இதனை நம்பியுள்ள சுமார் 5 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கல்யாணம், காதுகுத்து, பிறந்த நாள், கோயில் திருவிழா, அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள், இதர நிகழ்வுகள் என அனைத்துக்கும் டிஜிட்டல் பேனர் வைக்கப்படுகிறது. அரசியல் கட்சியினர் போட்டி போட்டிக் கொண்டு டிஜிட்டல் பேனர் வைத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்ததால்தான், டிஜிட்டல் பேனர் தொழிலுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
தனது வீட்டு முன்பு வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனரை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி பெண் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்தான், “உயிருடன் இருப்பவர்களுக்கு டிஜிட்டல் பேனர் வைக்கக்கூடாது” என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக பேனர் வைப்பதில் சட்டவிதிகளைப் பின்பற்றும்படி அரசும் நெருக்கடி கொடுக்கத் தொடங்கிவிட்டது. இத்தொழிலை நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சத்து 50 ஆயிரம் பேர் நம்பியுள்ளனர். இத்தொழில் மூலம் ஆண்டுக்கு ரூ.300 கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது. நீதிமன்ற உத்தரவால் இதனை நம்பியிருப்போரின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது என்கின்றனர் இந்த தொழிலில் ஈடுபட்டவர்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு டிஜிட்டல் பிரிண்டிங் சங்கத் தலைவர் எம்.சுரேஷ் கூறியதாவது: நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு டிஜிட்டல் பேனர் தொழில் வெகுவாகப் பாதித்துள்ளது.
பேனர் வைக்க விரும்புவோரே அதற்கான அனுமதியைப் பெற வேண்டும். சோழிங்கநல்லூரில் இருப்பவர் காஞ்சிபுரமும், மார்த்தாண்டத்தில் இருப்பவர் கன்னியாகுமரிக்கும், ராமேசுவரத்தில் இருப்பவர் ராமநாதபுரத்துக்கும் அனுமதி வாங்க செல்ல வேண்டியுள்ளது. தூரம் மற்றும் அலைச்சல் காரணமாக பலரும் பேனரை வைக்கும் எண்ணத்தையே விட்டுவிடுகின்றனர்.
இதனால் அருகில் உள்ள காவல்நிலையம் அல்லது வருவாய் அலுவலகம் போன்ற இடத்தில் அனுமதியும், பேனருக்கான கட்டணமும் செலுத்தும் வசதி செய்து தர வேண்டும் என்பது உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வைத்துள்ளோம் என்றார் சுரேஷ்.
டிராபிக் ராமசாமி ஆதரவு
டிஜிட்டல் பேனரால் பொதுமக்கள் அனுபவித்த சிரமத்தைக் கண்டு பொறுக்காமல் பல இடங்களில் பேனரைக் கிழித்தவர்
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பேனரைக் கிழித்தபோது அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதேநேரத்தில் டிஜிட்டல் பேனர் தொழில் புரிவோரின் கோபத்துக்கும் ஆளானார். ஆனால், சென்னையில் நேற்று முன்தினம் (நவ.20) தமிழ்நாடு டிஜிட்டல் பிரிண்டிங் சங்கத்தினர் சார்பில் நடைபெற்ற கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தை டிராபிக் ராமசாமிதான் முடித்துவைத்தார்.
பேனர் வைக்கக்கூடாது என்று வழக்கு தொடர்ந்த நீங்கள் இப்போது இந்த போராட்டத்தை முடித்துவைத்துள்ளீர்கள். அப்படியானால் பேனர் வைப்பதை ஆதரிக்கிறீர்களா என்று கேட்டபோது, “பேனர் வைப்பதை நான் எதிர்க்கவில்லை. பொதுமக்களுக்கு இடையூறாக வைத்தததால்தான் வழக்கு தொடர்ந்தேன். அதனால் 2011-ம் ஆண்டு பேனர் வைப்பதை முறைப்படுத்தும் வகையில் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி, பேனர் வைப்பதற்கு மாவட்ட ஆட்சியரிடம் 15 நாட்களுக்கு முன்பு அனுமதி வாங்க வேண்டும். நான்கு சாலைகள் சந்திக்கும் டிராபிக் சின்னலில் பேனர் வைக்கக்கூடாது. அங்கே சாலைக்கு 100 மீட்டர் தள்ளித்தான் வைக்க வேண்டும். நடைபாதையின் குறுக்கே பேனர் வைக்கக்கூடாது. ஏரியா வாரியாக, சாலை வாரியாக அனுமதிக்கப்படும் பேனரின் அளவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை மீறி பேனர் வைப்போருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம், ஓராண்டு சிறை அல்லது இரண்டும் விதிக்க சட்டம் வகை செய்கிறது. இந்த சட்டப்படி பேனர் வைப்பதில் எனக்கு ஆட்சேபம் இல்லை” என்றார் டிராபிக் ராமசாமி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT