Published : 13 Jul 2014 05:20 PM
Last Updated : 13 Jul 2014 05:20 PM

குமரியை உலுக்கும் கல்குவாரி பிரச்சினை- இயற்கை ஆர்வலர்கள் ஆதரவு; தி.மு.க. எதிர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி கல்குவாரிகள் மூடப்பட்டுள்ளன. இதற்கு இயற்கை ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளதாக பலரும் குறைகூறுகின்றனர்.

அனுமதி இல்லை

கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை, 100-க்கும் மேற்பட்ட அனுமதி பெற்ற மற்றும் பெறாத கல்குவாரிகள் செயல்பட்டு வந்தன. கல்குவாரிகள் தொடர்பாக 2012-ம் ஆண்டு உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது.

நீதிமன்றம் தடை

அதன்படி, புதிதாக கல்குவாரிகளுக்கு லைசென்ஸ் பெற வேண்டுமானால், 7 வேறுபட்ட துறையின் உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய மாநில சுற்றுச்சூழல் குழுவிடம் அனுமதி பெற வேண்டும். பொதுவாக கல்குவாரிகளின் அனுமதி காலம் 5 ஆண்டுகள் தான். அதன் பின்பு உரிமத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும்.

கன்னியாகுமரியில் சமீபகா லமாக புதிய குவாரிகளுக்கு அனுமதி வழங்கவும், உரிமத்தை நீட்டிப்பு செய்யவும் அனுமதி மறுக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் தரப்பில், சென்னையில் உள்ள மாநில சுற்றுச்சூழல் குழுவிடம் அனுமதி பெற பரிந்துரைக்கப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு, மாம்பழத்துறையாறு அணை அருகே இயங்கி வந்த கல்குவாரியை எதிர்த்து சிலர் தொடுத்த வழக்கில் அந்த குவாரிக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

அதே காரணங்களையும், கஸ்தூரி ரங்கன் அறிக்கையை யும் சுட்டிக்காட்டி, மாவட்டத்தில் மிச்ச மீதி இருந்த கல்குவாரிகளுக்கும், மாவட்ட ஆட்சியர் தடை விதித்தார்.

கட்டுமானப் பணி

கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குவாரிகளை தடை செய்துள்ளதால் கட்டுமானத்துக்கு தேவையான கருங்கல், ஜல்லி உள்ளிட்ட பொருட்கள் கிடைப்பதில்லை எனவும், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறி குமரி திமுகவினர் போராட்டம் அறிவித்துள்ளனர்.

கேரளாவில் அழிப்பதில்லை

அதேவேளை, கல்குவாரிக ளுக்கு மீண்டும் அனுமதி வழங்கவே கூடாது என போராட தயாராகி வருகின்றனர் இயற்கை ஆர்வலர்கள். இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் லால்மோகன் கூறும்போது, 'குமரி மாவட்டத்தில் மழையளவு குறையவும், ரப்பர் தோட்டங்களில் ரப்பர் பாலின் அளவு குறையவும், மலையோர பகுதிகளில் வீடுகள் சேதமடையவும் இந்த கல் குவாரிகள் தான் காரணம். குவாரிகளில் பணிபுரிவோருக்கும் 'சில்கோசிஸ்' எனும் நுரையீரல் நோய் ஏற்படுகிறது.

குமரி மாவட்ட மலைகளைக் குடைந்து எடுத்த கற்கள், ஆயிரக்கணக்கான லாரிகள் மூலம் கேரளா கொண்டு செல்லப்பட்டு வந்தன. அதே நேரத்தில் கேரளாவில் மலைகளை அழிப்பதில்லை. மேற்குத் தொடர்ச்சி மலையில் கல்குவாரிகள் அமைக்கக் கூடாது என, கஸ்தூரிரங்கன் அறிக்கைக்கு பின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதை பின்பற்றியே குமரி மாவட்டத்தில் கல்குவாரிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத் தலைமுறையினரின் நலன் காக்கும் நோக்கோடு, கல் குவாரிகளை தடை செய்திருப்பது வரவேற்கத்தக்கதே' என்றார் அவர்.

வேலையின்மை, கட்டுமானப் பொருட்கள் தட்டுப்பாடு உள்ளிட்டவை ஜீரணித்துக் கொள்ள முடியாத பிரச்சினைகள் தான். அதே நேரத்தில், அந்த பிரச்சினைகளுக்கான தீர்வு சுற்றுச்சூழலுக்கு வேட்டு வைக்கும் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை என்பது இவர்களின் கருத்து.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x