Last Updated : 09 Nov, 2017 10:51 AM

 

Published : 09 Nov 2017 10:51 AM
Last Updated : 09 Nov 2017 10:51 AM

கடனால் தத்தளிக்கிறதா தமிழக அரசு?

தமிழக அரசின் நிதிநிலை மிக மோசமாக உள்ள நிலையில் அதை சரி செய்ய மிக வேகமான நடவடிக்கைகள் அவசியம் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். இல்லையெனில் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் பொருளாதார நெருக்கடி தமிழகத்தை மூழ்கடித்து விடும் எனவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

நியாய விலைக்கடைகளில் அரசு வழங்கும் சர்க்கரையின் விலையை வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு, 13.50 ரூபாயில் இருந்து 25 ரூபாயாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரைக்கான மானியத்தை மத்திய அரசு ரத்து செய்து விட்டதால் இந்த விலை உயர்வு என விளக்கம் அளிக்கிறது தமிழக அரசு.

ஆனால் தமிழக அரசை எதிர்கட்சிகள் கடுமையாக சாடுகின்றன. உணவு பாதுகாப்புச் சட்டத்தில் கையெழுத்திட்டாலும், நியாய விலைக்கடைகள் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் சேவையில் எந்த குறைவும் இருக்காது என்ற வாக்குறுதி என்ன ஆனது என தமிழக அரசை எதிர்கட்சிகள் உலுக்கி எடுக்கின்றன.

ஆனால், விலை உயர்வு சர்க்கரையோடு நின்று விடுமா? அல்லது தொடருமா? என்ற கேள்வியும் எழுகிறது.

இதற்கெல்லாம் அடிப்படை காரணம் தமிழக அரசின் தற்போதைய நிதிநிலைமை தான் என்ற வாதம் முன் வைக்கப்படுகிறது. மத்திய ரிசர்வ் வங்கி சில மாதங்களுக்கு முன் வெளியிட்ட, மாநிலங்களின் நிதிநிலை 2016-17 குறித்த அறிக்கையில் தென் மாநிலங்களில் அதிகஅளவாக தமிழகத்தில் வருவாய் பற்றாக்குறை நிலவி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா என மற்ற தென் மாநிலங்களை ஒப்பிட்டால் வருவாய் பற்றாக்குறை 15,850 கோடியாக அதிகரித்துள்ளது.

ஆந்திராவின் வருவாய் பற்றாக்குறை 4,870 கோடி ரூபாயாகவும், தெலுங்கானாவின் வருவாய் பற்றாக்குறை 3,720 கோடி ரூபாயாகவும் உள்ளது. அதேசமயம் கேரளாவின் வருவாய் பற்றாக்குறை.13,070 கோடியாக உள்ளது. கர்நாடகத்தில் 520 கோடி ரூபாய் உபரி வருவாய் வந்துள்ளது. ஆனால் தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை கடுமையாக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இதுபோலவே தமிழக அரசின் நிதி பற்றாக்குறையும் கவலையளிக்கும் விதத்தில் உள்ளது. நடப்பாண்டில் தமிழகத்தின் நிதிப்பற்றாக்குறை 42,000 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் இதன் அளவு இன்னமும் அதிகரிக்கும் என தெரிகிறது. இது மாநில மொத்த உற்பத்தியில் 4.58 சதவீதம் என்பதுடன் தமிழ்நாடு நிதிநிலை நிர்வாக பொறுப்புடைமைச் சட்டத்தின் வரையறையை விட கூடுதலாகும்.

‘உதய்’ திட்டத்தின் படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கடன்களை ஏற்றுக் கொண்டுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இது தற்காலிக நிலை தான். விரைவில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிதி பற்றாக்குறை 3 சதவீத அளவிற்கு குறைக்கப்படும் என பட்ஜெட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் நிலைமை சீரடைய வில்லை. அதை விடவும் மோசமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

கடுமையான நிதிசுமையால் தள்ளாடும் தமிழக அரசு, போக்குவரத்து தொழிலாளர்களிடமிருந்து வசூலித்த வருங்கால வைப்பு நிதி 5,000 கோடி ரூபாயை அவற்றுக்குரிய கணக்குகளில் செலுத்த வில்லை என தொழிற்சங்கங்கள் புகார் தெரிவிக்கின்றன. மேலும் 6 ஆண்டுகளாக போக்குவரத்துக்கழகங்களில் இருந்து ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பயன்கள் எதையும் வழங்க வில்லை. இதுவும் தமிழக அரசின் நிதிசுமையில் சேர்ந்துள்ளது. நிதிச்சுமை காரணமாக தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களுடன் புதிய ஊதிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள வில்லை என்ற புகாரையும் தொழிற்சங்கங்கள் முன் வைக்கின்றன.

மின்துறையிலும் இதே நிலை தான். மத்திய அரசின் ஊரக மின் கழகத்திடமிருந்து வாங்கிய கடனால் மேலும் சுமையை சுமந்து நிற்கிறது தமிழக அரசு.

இதுபோலவே ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகளின் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்க கொள்கை அடிப்படையில் தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. 2016 - 2017 பட்ஜெட்டில் தமிழக அரசு கூறியுள்ளபடி, 46.332 கோடி ரூபாய். இதுதவிர ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய கால பலன்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை 20,577 கோடி ரூபாய். இது மொத்த வருவாய் செலவுகளில் 38.17 சதவீதமாகும். இந்த நிலையில் ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரைபடி சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டால் இன்னமும் நிதி சுமை அதிகரிக்கும்.

எகிறும் கடன்

2018ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் தமிழக அரசின் நிகர கடன் 3 லட்சத்து 14 ஆயிரத்து 366 கோடி ரூபாயாக இருக்கும் என இந்த ஆண்டு பட்ஜெட்டில் தமிழக அரசு கூறியுள்ளது. மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் இது 20.90 சதவீதம், கடன் வாங்கும் அளவு அனுமதிக்கப்பட்ட 25 சதவீதத்தை விடவும் குறைவு தான் என்பது தமிழக அரசின் வாதம்.

ஆனால் திமுக, பாமக உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த வாதத்தை மறுக்கின்றன.

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் கடன் தொகையை சேர்த்தால் கடன் சுமை, 5 லட்சம் 75 ஆயிரம் கோடியை தாண்டும் என எதிர்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.

வட்டித் தொகை செலுத்துதல் மற்றும் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி போன்ற காரணங்களால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறுகிறது. 2016 -2017ம் ஆண்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் 22,815 கோடி ரூபாய் அளவிலான கடனை தமிழக அரசு ஏற்றுக் கொண்டதால் கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.

உயராத வருவாய்

தமிழக அரசின் செலவு ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில் வருவாய் அதிகரிக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக எதிர்பார்த்தபடி வருவாய் இலக்கு எட்டப்பட வில்லை.

தமிழக அரசின் சொந்த வரி வருவாய் குறைந்து போனதற்கு ரியல் எஸ்டேட் துறையின் வீழ்ச்சி முக்கிய காரணம். இதனால் முத்திரைத்தாள்கள் மற்றும் பதிவுக் கட்டணம் குறைந்து போனதாக தமிழக அரசு கூறுகிறது. இந்த நிலையில் தற்போது வரை பெரிய மாற்றம் ஏற்பட வில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் ரியல் எஸ்டேட் துறையின் சரிவு மேலும் தொடர்கிறது.

பதினான்காவது நிதிக்குழுவின் பரிந்துரைகளால் மத்திய அரசு, மாநிலங்களக்கு பகிர்ந்தளிக்க கூடிய நிகர வரி வருவாயில் தமிழகத்தின் பங்கு குறைந்து போனதாகவும் கூறுகிறது. அதுமட்டுமின்றி மத்திய அரசின் மானியங்கள் மற்றும் திட்ட பங்களிப்பை குறைந்து வருவதால் கூடுதல் நிதிச் சுமையை ஏற்க வேண்டிய கட்டாயம் உள்ளதாகவும் தமிழக அரசு கூறுகிறது.

டாஸ்மாக் மதுபான கடைகள் மூலம் தமிழக அரசு கணிசமான வருவாய் ஈட்டி வரும் நிலையில் 2016ல் 500 கடைகள் மூடப்பட்டதாலும், 2017 பிப்ரவரியில் 500 கடைகள் மூடப்பட்டதாலும் வருவாய் குறைய வாய்ப்புள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி வசூல் கூடும் என்ற நம்பிக்கையில் உள்ளது. அதுபோலவே, ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலாகியுள்ளதால் அதன் மூலம் கிடைக்கும் மாநிலத்தின் பங்கு அதிகமாக இருக்கும் என்பதால் கூடுதல் வருவாய் வரும் என்பதும் தமிழக அரசின் எண்ணம்.

இதன் பின்னணியில் அரசு துறை சார்ந்தவர்கள், பொருளாதார நிபுணர்களிடம் பேசினோம். அவர்கள் கூறியதாவது:

உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கெடுபிடியை தாண்டி தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. தற்போது ஒரு ரூபாய் வருவாய் வரும் நிலையில், 2 ரூபாய் 50 பைசா அளவிற்கு கடன் அளவு உள்ளது. அப்படியானல் வருவாய் 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் 4 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் தொகை இருக்க வாய்ப்புள்ளது.

தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை 16,000 கோடி ரூபாயாக உள்ளது. அதேசமயம் நிதி பற்றாக்குறை 42,000 கோடியாக உள்ளது. இது மிகவும் கவலையளிக்கும் விஷயம். வருவாய் வேறுபாடு 10 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கிறது, இதை குறைத்துக்கொள்ள வேண்டும் என மாநில திட்ட கமிஷனே சுட்டிக்காட்டியுள்ளது. இவை எல்லாம் தமிழக நிதிநிலைமை எச்சரிக்கும் அம்சங்கள். எனவே நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ள தமிழக அரசு அதை சரி செய்வதற்கு அவசர கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. வருவாயை கூட்டுவதற்கான வாய்ப்பு இல்லாத நிலையில் செலவுகளை குறைப்பதை தவிர தமிழக அரசுக்கு வேறு வழியில்லை ’’எனக் அவர்கள் கூறுகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக தான், தமிழக அரசு செலவை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆதார் எண் இணைப்பு என்ற ஆயுதத்தின் மூலம் மானியத்திற்காக செலவிடும் தொகையில் பெருமளவு மத்திய அரசு குறைத்துள்ளது. அதுபோலவே, சமையல் எரிவாயு, மண்ணெண்ணை என ஒவ்வொன்றிலும் கை வைப்பதன் மூலம் மத்திய அரசின் மானிய செலவு வெகுவாக குறைந்துள்ளது.

இந்த பாணியில் தான் தமிழக அரசின் பயணமும் இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மானியம் எவ்வளவு?

நடப்பு பட்ஜெட் அறிக்கையில் கூறியுள்ளபடி, பல்வேறு திட்டங்களுக்கும் தமிழக அரசு செலவழிக்கும் மானிய தொகை, 2017 -2018 பட்ஜெட்படி 72,616 கோடி ரூபாய். ஆகும். உணவு, கல்வி, மின்சாரம், உதவித்தொகைகள், வீட்டுவசதி உள்ளிட்ட பல்வேறு வகையான மானியங்களும் இதில் அடங்கும். இது தவிர கடனுக்கான வட்டியையும் கணிசமான அளவில் தமிழக அரசு செலுத்தி வருகிறது. நடப்பு பட்ஜெட் புள்ளி விவரங்களின் படி தமிழக அரசு செலுத்தி வரும் வட்டி 20,982 கோடி ரூபாய். மொத்த வருவாயில் இது 14.82 சதவீதம் ஆகும். இவை எல்லாம் தமிழக அரசின் நிதிநிலையை சுமையாக்கியுள்ளது.

இந்த சமயத்தில் தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக பொருளதாரதுறை பேராசிரியர் ஜோதி சிவஞானம் கூறியதாவது:

‘‘தமிழக பொருளாதாரம் என்பது இந்திய பொருளாதாரத்துடன் இணைந்துள்ளது. எப்போதெல்லாம் இந்திய பொருளாதாரம் பாதிப்பை சந்திக்கிறதோ அப்போது தமிழக பொருளாதாரமும் பாதிப்பை சந்திக்கிறது. 2007 - 08ம் ஆண்டுகளுக்கு பின் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார பாதிப்புகள் இன்னமும் தொடருகின்றன. இந்திய பொருளாதாரத்தில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத்துறையின் பங்கு அதிகம். அதுபோல தான் தமிழக பொருளாதாரத்திலும் சேவைதுறையின் பங்கு அதிகமாக உள்ளது. இதனால் உலக நாடுகளை சார்ந்து இருப்பதால், அதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

பொதுவாக மற்ற பல நாடுகளை ஒப்பிட்டால் இந்தியாவில் வரி வருவாய் குறைவாக 14.6% என்ற அளவில் குறைவாக உள்ளது. மற்ற பல மாநிலங்களை ஒப்பிட்டால் தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் வரி வருவாய் கூடுதலாகவே உள்ளது.

ஆனால் ஜிஎஸ்டி அமலானதை தொடர்ந்து உடனடியாக வரி வருவாய் குறைவது தவிர்க்க முடியாதது. இந்த இழப்பீடை சரி செய்ய நிதியுதவி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வில்லை. பணமதிப்பிழப்பு போன்ற நடவடிக்கையால் ரியல் எஸ்டேட் துறையில் சரிவு ஏற்பட்டு பத்திரப்பதிவு 60 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது.

இதுபோன்ற சூழலில், தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பீட்டை சரி செய்ய வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. பொருளாதார வளர்ச்சியில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும். தொழில்துறையின் மீது கவனம் செலுத்தினால் பொருளாதார சரிவில் இருந்து மீள முடியும்.

தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய முன் வராத நிலையில், அரசு முதலீடு செய்ய வேண்டும். நிதி பற்றாக்குறையும், வருவாய் பற்றாக்குறையும் அதிகரித்து இருப்பது கவலையளிக்க கூடிய விஷயம். உபரியாக இருந்த வருவாய் பற்றாக்குறையாக உள்ளது. இதன் மூலம் அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்குவது போன்ற சூழல் உள்ளது. எனவே வீண் செலவுகளை குறைத்து அதேசமயம் வருவாயை பெருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக்கூறினார்.

தமிழகத்தின் பொருளாதார நிலை மிக மோசமாக உள்ள நிலையில், அதை உடனடியாக சமாளித்தாக வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு உள்ளது. ஆனால், தமிழகத்தின் வருவாய் இயல்பான அளவை விட குறைந்து வருகிறது.

இந்த சூழலில் தமிழக அரசின் முன் உள்ள வாய்ப்புகள் என்ன? இதுகுறித்து பொருளாதார ஆலோசகர் சோம. வள்ளியப்பன் கூறியதாவது:

‘‘தமிழக அரசின் கடன் சுமை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பல்வேறு வகைகளிலும் செலவு அதிகரித்து இருப்பதால் இது மேலும் உயரவே வாய்ப்புள்ளது. அதுபோலவே 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை ஏற்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதால் அதனால் கூடுதல் செலவு ஏற்படும்.

தமிழக அரசின் பட்ஜெட்டில் பெரும் தொகை அரசு ஊழியர்களின் சம்பளம், பென்ஷன் மற்றும் மானியங்களுக்கு செலவிடப்படுகிறது.

அதேசமயம் தமிழக அரசின் வருவாய் தற்போதைய சூழலில் உயருவதற்கான வாய்ப்பில்லை. ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதால், உடனடியாக வரி வருவாய் அதிகரிக்க வாய்ப்பில்லை. ஜிஎஸ்டி முழுமையாக செயல்பாட்டிற்கு வரும் போது தமிழகத்தின் பங்கு மூலம் கூடுதல் வருவாய் ஈட்ட வாய்ப்புள்ளது.

ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி மந்தமாக இருப்பதால் பத்திரப்பதிவு குறைந்துள்ளது. எனவே இதன் மூலம் கிடைக்கும் வருவாய் சரிந்துள்ளது. அதுபோலவே டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாயும் இனிமேல் அதிகரிக்காது. எனவே தமிழக அரசுக்கு கிடைக்கும் வருவாய் உயர வாய்ப்பில்லை. அதேசமயம், தமிழக அரசு செய்யும் செலவுகள் அதிகரித்துக் கொண்ட செல்கிறது. முக்கியமான செலவுகளை குறைக்க முடியாத சூழலில் மானியங்களை குறைக்க வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு உள்ளது.

அதன் காரணமாக, சமீபத்தில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஏற்கனவே பல மானியங்களை குறைத்து வரும் நிலையில் அதை பின் தொடர்ந்து தமிழக அரசும் மானியங்களை குறைப்பதற்கான நடவடிக்கையை தொடங்கி இருப்பதாகவே தெரிகிறது’’என அவர் கூறினார்.

எளிமையாகும் நடைமுறை

இதனிடையே தமிழகத்தில் தொழில் தொடங்க நினைக்கும் புதிய தொழில் முனைவோருக்கு இருந்து வரும் பல நடைமுறை பிரச்னைகளை தீர்க்கும் முயற்சிலும் தமிழக அரசு இறங்கியுள்ளது.

இதுபற்றி பொருளாதார நிபுணர் கெளரி ராமசந்திரன் கூறியதாவது:

‘‘தமிழக அரசின் நிதி நிலைமை மிக மோசமாக உள்ளது. வருவாய் பற்றாக்குறையும், நிதி பற்றாக்குறையும் கவலை அளிக்கின்றன. இந்த சூழலில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு உள்ளது. தமிழகத்தில் அனுமதி பெறுவது உள்ளிட்ட சிக்கல்கள் இருப்பதால் தொழில்முனைவோர் வரத் தயங்குகின்றனர். இதையடுத்து 11 துறைகள் சார்ந்த அனுமதியை ஒன்றாக ஒற்றைச் சாளர முறையில் வழங்குவதற்காக தமிழக அரசு சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இதுபோன்ற தமிழக அரசின் நடவடிக்கைகள் வரவேற்க தக்கது. இதுபோன்ற நடவடிக்கைகள் புதிய தொழில்முனைவோருக்கு பெரிதும் உதவியாக இருக்கும் ’’எனக் கூறினார்.

தமிழக அரசின் நிதிநிலை மிக மோசமாக உள்ள நிலையில் அதை சரி செய்ய மிக வேகமான நடவடிக்கைகள் அவசியம் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். இல்லையெனில் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் பொருளாதார நெருக்கடி தமிழகத்தை மூழ்கடித்து விடும் எனவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

விழித்துக் கொள்ளுமா தமிழக அரசு?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x