Published : 25 Jul 2023 07:04 PM
Last Updated : 25 Jul 2023 07:04 PM
சென்னை: "உதயநிதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றப் பிறகு, விளையாட்டுத் துறையே ஒரு புத்துணர்ச்சி கண்டிருக்கிறது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னையில் முதலமைச்சர் கோப்பை நிறைவு விழா நேரு உள் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடந்தது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த விழாவில் முதல்வர் பேசுகையில், "தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். விளையாட்டுப் பிள்ளையாக இருக்கிறார்களே என்று வளர்ந்த பிள்ளைகளைப் பார்த்து சில பெற்றோர்கள் நினைப்பதுண்டு. விளையாட்டுத் துறை அமைச்சராக நம் பிள்ளை சிறப்பாக செயல்படுகிறார் என்று பெற்றவரை மகிழ வைக்கக்கூடியவராக உதயநிதி இருக்கிறார்.
விளையாட்டைப் பார்ப்பவர்களுக்கு களிப்பாக இருக்கும். விளையாட்டுப் போட்டிகளை நடத்துபவர்களும், அதில் கலந்துகொள்பவர்களும் பொறுப்பாக இருக்க வேண்டும். இந்நிகழ்வை மிகுந்த பொறுப்புடன் நடத்தியிருக்கும் விளையாட்டுத் துறையின் அனைத்து அதிகாரிகளுக்கும் எனது வாழ்த்துகள்.
நேரு உள் விளையாட்டரங்கைப் பார்க்கும்போது, என் நினைவுகள் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்குச் செல்கிறது. இங்குதான், கடந்த ஆண்டு அந்த நிகழ்வின் தொடக்க நிகழ்ச்சியும், நிறைவு நிகழ்ச்சியும் நடைபெற்றது. நீங்கள் அனைவரும் அந்த நிகழ்ச்சியைப் பார்த்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். மற்ற விளையாட்டு நிகழ்ச்சிகளின்போது நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகள் போல இல்லாமல், தமிழகத்தின், இந்திய நாட்டின் வரலாற்றை நமது மண்ணுக்கு விருந்தினராக வந்த வெளிநாட்டு வீரர்களுக்கு கலை நிகழ்ச்சிகள் மூலமாக அறிமுகப்படுத்தினோம். அதனால், கிடைத்த பாராட்டு அரசுக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கே சொந்தமானது.
அத்தகைய பெருமையைத் தேடித் தந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போதுதான், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என்று நான் அறிவித்தேன். 15 விளையாட்டுகளில், பள்ளி, கல்லூரி, பொதுப் பிரிவு, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளின் கீழ் இந்தப் போட்டிகள் நடத்தப்படும் என்று நான் அறிவிப்பு செய்தேன். அந்த அறிவிப்பை நிகழ்த்திக் காட்டிய அமைச்சர் உதயநிதிக்கு பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த மே 8ம் தேதி, முதலமைச்சர் போட்டிக்கான தீரன் சின்னத்தையும் அதற்கான பாடலையும் நான் வெளியிட்டேன். ஜூன் 30ம் தேதி தொடங்கப்பட்ட இந்த போட்டிகள் இன்று நிறைவு கண்டுள்ளது. உதயநிதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றப் பிறகு, விளையாட்டுத் துறையே ஒரு புத்துணர்ச்சி கண்டிருக்கிறது. நான் 2006ம் ஆண்டு கருணாநிதியின் அமைச்சரவையில் அமைச்சராக இடம்பெற்றபோது, பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டது இந்த நேரு உள் விளையாட்டரங்கில்தான்.
இங்குள்ள விளையாட்டு வீரர்களைப் போல நேரு விளையாட்டரங்கம் எனக்கும் சிறப்பான வாய்ப்பை கொடுத்தது. அப்போது நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தேன். அந்த துறையை நான் நிர்வகிப்பதைப் பார்த்தால், பொறமையாக இருப்பதாக அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி கூறினார். அந்தவகையில் இப்போது எனக்கு விளையாட்டுத் துறையின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. விளையாட்டுத் துறையால், அமைச்சர் பெருமை அடைவதையும், அமைச்சர் உதயநிதியால் விளையாட்டுத் துறை பெரும் அடையும் காட்சிகளை நான் பார்க்கிறேன். இவையெல்லாம் விளம்பரத்துக்காக செய்யப்படுபவை அல்ல. விளையாட்டுத்துறையின் செயல்பாடுகள் மூலம் இத்தகைய பாராட்டுகள் கிடைக்கிறது" என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...