Published : 25 Jul 2023 04:37 PM
Last Updated : 25 Jul 2023 04:37 PM
சென்னை: சென்னை மாநகராட்சியில் பல்வேறு துறைகள் மேற்கொள்ளும் சாலை வெட்டுப் பணிகள் குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில், இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னையில் பல்வேறு சேவை துறைகளின் சார்பில் சாலை, மழைநீர் வடிகால், மேம்பாலம், பாலம், மின்வட கேபிள் புதைத்தல், குடிநீர் குழாய் புதைத்தல், மெட்ரோ ரயில் சுரங்கப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.இந்தப் பணிகளில், அனைத்து துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், குறிப்பிட்ட நேரத்தில் பணிகளை முடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. குறிப்பாக சாலை, மழைநீர் வடிகால், மெட்ரோ ரயில் பணி உள்ளிட்டவற்றுக்கு போக்குவரத்து போலீசாரின் அனுமதி, இதர துறைகளின் அனுமதி மற்றும் ஒத்துழைப்பு இல்லாததால் அவை விரைந்து முடிக்க முடியாத நிலை உள்ளது.
ஒரு சாலையை சென்னை மாநகராட்சி சீரமைத்தவுடன், அடுத்த சில மாத இடைவெளியில் மற்றொரு துறை, அதே சாலையைத் தோண்டி பணிகளில் ஈடுபடுகிறது. இதனால், அச்சாலை பல மாதங்கள் பள்ளம், மேடாக உள்ளது. இதன் காரணமாக, பொதுமக்கள் - வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இதற்கு தீர்வு காணும் வகையில், சென்னை மாநகராட்சி தொடர்புடைய சேவைத் துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது குறித்த, பல்துறை அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து சாலைப் பணிகளும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "சென்னையில் வளர்ச்சி மற்றும் திட்டப் பணிகள் தொய்வில்லாமல் விரைவில் முடிக்கவும், ஏதேனும் குறைகள் இருந்தால் அவை உடனடியாக நிவர்த்தி செய்து பணிகளை முடிக்க,12 அரசு துறைகளை ஒருங்கிணைத்து குழு அமைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னையில் மேற்கொள்ளப்படும் சாலை வெட்டு மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த விபரம், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.
இதற்காக, மாநகராட்சி இணையதளத்தில் பிரத்யேகமாக ஒரு லிங்க் துவங்கப்பட்டு, அதில், எந்தப் பகுதியில், என்னென்ன பணிகள் நடைபெறுகிறது. அப்பணிகளை எத்துறை செய்கிறது, ஒப்பந்தாரார் யார், பணிகள் முடிக்க வேண்டிய காலம், அப்பணிகளால் ஏற்படும் இடர்பாடுகள், பணிகள் முடிந்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதில், குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் பணிகளை முடிக்காத ஒப்பந்தாரருக்கு அபராதம் விதிக்கப்படும். இவை, ஓரிரு வாரங்களுக்குள் பயன்பாட்டுக்கு வரும்" என்று அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT