Published : 25 Jul 2023 01:16 PM
Last Updated : 25 Jul 2023 01:16 PM
சேலம்: சேலம் அம்மாப்பேட்டை மிலிட்டரி ரோடு, அம்மாப்பேட்டை மெயின்ரோடு உள்ளிட்ட இடங்களில் பாதாள சாக்கடையின் திறப்புகள், சாலையில் மேடு போல உயர்ந்து இருப்பதால், அவற்றின் மீது செல்லும் வாகனங்கள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது.
இதனை சீரமைக்க வேண்டும் என்று `இந்து தமிழ் திசை - உங்கள் குரல்’ பகுதியில் அம்மாப்பேட்டை வாசகர் கணேசன் தெரிவித்துள்ளார்.
இப்பிரச்சினை குறித்து அவர் மேலும் கூறியது: சேலம் அம்மாப்பேட்டை மிலிட்டரி ரோடு, சேலம் - சென்னை சாலையின் ஒரு பகுதியாக இருக்கிறது. இந்த சாலையின் ஒரு பகுதியில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு, குழாய்கள் மற்றும் பாதாள சாக்கடைக்குள் துப்புரவுப் பணி மேற்கொள்ள வசதியாக, மூடியுடன் கூடிய திறப்புகள் போன்றவை, நிலத்தடியில் பதிக்கப்பட்டன.
இப்பணிகள் முடிவுற்றதும், பள்ளம் தோண்டப்பட்ட சாலை சீரமைக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. ஆனால், சாலையில் பதிக்கப்பட்ட மூடியுடன் கூடிய பாதாள சாக்கடை திறப்பானது, சாலையின் நடுவில் ஆங்காங்கே சுமார் 4 அடி விட்டமும், சுமார் அரை அடி உயரமும் கொண்ட மேடாக மாறிவிட்டது.
இவை, சாலை மட்டத்தை விட, உயரமாக இருப்பதால், இரு சக்கர வாகனங்கள், அந்த மேட்டின் மீது ஏறி இறங்கும்போது, தடுமாற்றமடைகின்றன. இதேபோல், கார்கள், பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள், சாலையின் நடுவே ஆங்காங்கே அமைந்துள்ள பாதாள சாக்கடை மேட்டின் மீது ஏறி, இறங்குவதை தவிர்க்க, சாலையில் இருந்து திடீரென விலகி செல்கின்றன.
அம்மாப்பேட்டை மிலிட்டரி சாலையானது, ஏற்கெனவே குறுகலாக இருக்கும் நிலையில், பாதாள சாக்கடை மேட்டின் மீது ஏறி இறங்குவதை தவிர்க்க, சற்று விலகிச் செல்லும்போது, சாலையோரத்தில் நடந்து செல்பவர்கள், இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றின் மீது மோதிவிடும் ஆபத்து உள்ளது.
இதேபோல், சேலம் அம்மாப்பேட்டை பிரதான சாலையிலும், பாதாள சாக்கடை திறப்புகள், சாலை மட்டத்தை விட, உயரமாக அமைக்கப் பட்டுள்ளன. இதனால், இந்த சாலையில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. இந்த சாலையில் ஷேர் ஆட்டோக்கள் அதிக எண்ணிக்கையில் சென்று வரும் நிலையில், ஆட்டோக்கள் நிலை தடுமாறி விழும் ஆபத்து நிலவுகிறது.
எனவே, பாதாள சாக்கடை பணிகள் முடிவுற்ற இடங்களில், சாலையின் நில மட்டம் ஒரே சீராக இருக்கும் வகையில், பாதாள சாக்கடை திறப்புகளையும் மூடி, மீண்டும் சாலையை அமைக்க வேண்டும். சேலம் மாநகரில் அத்வைத ஆசிரமம் சாலை உள்பட பல இடங்களில் இதே போன்ற பிரச்சினை இருக்கிறது. மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் பாதாள சாக்கடை திறப்புகளையும், சாலையின் மட்டத்துக்கே அமைக்க வேண்டும்.
தற்காலிக நிவாரணமாக, சாலையில் பாதாள சாக்கடை திறப்புகள் அமைந்துள்ள மேடான இடத்தை அடையாளப்படுத்தும் வகையில், அவற்றின் மீது வட்டக்குறியீடு அமைக்க வேண்டும். இதனால், வாகனங்களில் வருவோர் சில மீட்டர் இடைவெளிக்குள், சாலையின் நிலையை அறிந்து, வாகனங்களை விபத்தின்றி இயக்க முடியும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT