Published : 25 Jul 2023 05:35 AM
Last Updated : 25 Jul 2023 05:35 AM
சென்னை: சென்னை பல்கலை.யின் 165-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்கிறார்.
பாரம்பரியமிக்க சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் 134 இணைப்பு கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை படித்த மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்கள் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கடந்த கல்வியாண்டில் படித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டச் சான்றிதழ் வழங்குவதற்கான சென்னை பல்கலை.யின் 165-வது பட்டமளிப்பு விழா சேப்பாக்கத்தில் உள்ள அதன் வளாகத்தில் ஆக. 6-ம் தேதி நடைபெறுகிறது.
ஆளுநர் - முதல்வர் பங்கேற்பு: இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துவிட்டதாக கூறப்படுகிறது. விழாவில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர் முர்மு, தரவரிசையில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், விருதுகள் வழங்கி சிறப்பிக்கவுள்ளார். இந்த விழாவுக்கு பல்கலை. வேந்தரும், ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை வகிக்கவுள்ளார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கவுரவ விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்
குடியரசுத் தலைவர் முர்மு, கடந்த முறை தமிழகம் வந்த போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ஈசா யோகா மையத்துக்கு சென்றிருந்தார். தற்போது அரசு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT