Published : 25 Jul 2023 06:12 AM
Last Updated : 25 Jul 2023 06:12 AM
சென்னை: சென்னை விமான நிலையத்தில், பயணிகள் எண்ணிக்கை, விமான சேவைகள் அதிகரித்துள்ளதால் கூடுதலாக உள்நாட்டு முனையம் அமைக்கப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தை புதிய ஒருங்கிணைந்த சர்வதேச விமான முனையம், உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளுடன் கூடிய நவீனவிமான நிலையமாக்க 2018-ல் மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, 2.21 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.2,467 கோடியில், 2 கட்டங்களாக பணிகளை இந்திய விமான நிலைய ஆணையம் தொடங்கியது.
முதல்கட்டமாக ரூ.1,260 கோடியில் 1.36 லட்சம் ச.மீ. பரப்பளவில்கட்டிமுடிக்கப்பட்ட புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் 8-ம் தேதி திறந்து வைத்தார். இந்த புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையம் டெர்மினல் 2 (டி-2) என்று அழைக்கப்படுகிறது.
புதிய முனையத்தில் கடந்த ஏப்.25-ம்தேதிமுதல் சோதனை ஓட்டங்கள் தொடங்கின. பின்னர், படிப்படியாக சர்வதேச புறப்பாடு, வருகை விமானங்கள், புதிய முனையத்துக்கு மாற்றப்பட்டன. ஜூலை 7 முதல் புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையம் முழு அளவில் இயங்கத் தொடங்கியது.
டெர்மினல் 3 இடிக்கப்படும்: ஏற்கெனவே சர்வதேச விமானம் முனையமாக செயல்பட்டு வந்த, டெர்மினல் 3 மற்றும் டெர்மினல் 4 கடந்த10-ம் தேதி மூடப்பட்டது. அடுத்தசில வாரங்களில் டெர்மினல் 3-ஐஇடிக்கும் பணி தொடங்கவுள்ளது.
இதற்கிடையே, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து, விமான சேவைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், உள்நாட்டு விமான நிலையத்தில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால், சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான முனையத்தை விரிவுபடுத்த இந்திய விமானநிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, சென்னை விமான நிலையத்தில் சர்வதேச முனையமாக செயல்பட்ட டி-3, டி-4 மூடப்பட்டு, அதில், டி-3 புதிய முனையம் கட்டுமான பணிக்காக இடிக்கப்படுகிறது. டி-4 புதிய கட்டிடம் என்பதால், இந்த முனையத்தை புதிய உள்நாட்டு முனையமாக மாற்றுவதற்கான பணிகள் தொடங்கவுள்ளன.
செப்டம்பரில் இருந்து சென்னை உள்நாட்டு விமான நிலையம் இரு பகுதிகளாக இயங்கப்படவுள்ளது. இப்போது உள்நாட்டு முனையமாக உள்ள டி-1 முனையத்தில், ஏர் இந்தியா, விஸ்தாரா, ஸ்பைஜெட், ஏர் ஏசியா, ஆகாஷா, அலையன்ஸ் ஏர், ட்ரூ ஜெட் உள்ளிட்ட விமான நிறுவனங்களின் உள்நாட்டு விமான சேவைகளையும், புதிதாக உருவாக்கப்படும் டி-4 உள்நாட்டு முனையத்தில், இண்டிகோ ஏர்லைன்ஸ் உள்நாட்டு விமானங்களையும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் பயணிகளுக்கு தாராளமாக இடவசதி கிடைப்பதோடு, விமானநிலையத்தில் நெரிசல் குறையும் என்றுசென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT