Published : 25 Jul 2023 06:04 AM
Last Updated : 25 Jul 2023 06:04 AM
சென்னை: சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் துணைமின் நிலையங்கள் அமைக்க இடம் கிடைக்காததால், சிறிய இடத்தில் அமைக்கும் வகையில் ‘காம்பேக்ட்’ துணைமின் நிலையம் அமைக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் வீடுகள், கடைகள் உள்ளிட்ட தாழ்வழுத்த பிரிவுக்கு 33/11 கி.வோல்ட் துணைமின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படுகிறது. ஒரு துணைமின் நிலையம் அமைக்க 4,300 சதுர அடி பரப்பளவு தேவைப்படுகிறது.
மேலும், இந்த துணைமின் நிலையத்தில் கட்டுப்பாட்டு அறையும், வெளிப்புறத்தில் 2 மின்மாற்றிகளும் நிறுவப்படும். அவற்றின் மூலம் 15 மெகாவாட் மின்சாரத்தைக் கையாள முடியும்.
இந்நிலையில், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் துணைமின் நிலையங்கள் அமைக்க இடம் கிடைப்பதில்லை. அதே சமயம் அந்நகரங்களில் நாளுக்குமின் தேவை அதிகரித்து வருகிறது.
இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விதமாக, காம்பேக்ட் எனப்படும் குறைந்த இடத்திலும் கச்சிதமாகப் பொருந்தக் கூடிய துணைமின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த மின்நிலையங்களை அமைக்க 2,400 சதுர அடி இடம் போதுமானது. கட்டுப்பாட்டு அறைக்குப் பதில் இன்டோர் கட்டுப்பாட்டு அறையில் மின்மாற்றி இயக்கம், மின்வழித் தடங்களில் மின்சாரம் அனுப்பும் பணி செய்யப்படும்.
அந்தப் பெட்டி தொலைத் தொடர்பு வசதியுடன் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்படும். மின்னணு முறையில் ஆளில்லாமல் இயங்கும். ஏதேனும் பழுது ஏற்பட்டால் அலாரம் ஒலி எழுப்பும்.
மேலும், கட்டுப்பாட்டு அறையிலிருந்தே பிரச்சினையை சரி செய்ய இயலும். இந்த துணைமின் நிலையத்தில் இருந்து 4 வழித் தடங்களில் மின்சாரம் செல்லும்.
இந்த துணைமின் நிலையம் அமைக்க ரூ.10 கோடி மட்டுமே செலவாகும். பழைய முறையில் துணைமின் நிலையம் அமைக்க ரூ.15 கோடி செலவாகும். சென்னையில் முதற்கட்டமாக 2 இடங்களில் இந்ததுணைமின் நிலையம் அமைக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT