Published : 25 Jul 2023 06:44 AM
Last Updated : 25 Jul 2023 06:44 AM

முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் கட்டிய கட்டிடங்கள் குறித்த டிஜிட்டல் ஆவணம்: நூற்றாண்டை முன்னிட்டு வெளியிட முடிவு

சென்னை: கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு, அவர் முதல்வராகவும், பொதுப்பணித் துறை அமைச்சராகவும் இருந்த காலகட்டத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள், கட்டமைப்புகளின் நோக்கம், பயன்பாடு அடங்கிய டிஜிட்டல் ஆவணத் தொகுப்பை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு “நவீன தமிழகத்தின் சிற்பி-கலைஞர்’ என்ற தலைப்பிலான கூட்டம், குழுத் தலைவரும், அமைச்சருமான எ.வ.வேலு தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் வேலு பேசியதாவது:

விவசாயம், மருத்துவம், உயர் கல்வி, தொழில் வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பம், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு, சாதி, மத வேறுபாடுகள் நீங்க இடஒதுக்கீடு, சமத்துவ-சமுதாயம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி, விவசாய உற்பத்தியை பெருக்கியது என பல்வேறு துறைகளிலும் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.

நாட்டிலேயே பணக்கார மாநிலங்களான மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில்கூட உணவு உற்பத்தி இல்லாததால், பஞ்சம் ஏற்பட்டது. முன்னாள் முதல்வர் கருணாநிதி ‘ஐஆர்-8’ என்ற நெல் வகையை அறிமுகப்படுத்தி, ஏக்கருக்கு 45 மூட்டைகள் உற்பத்தி செய்யும் நிலையை உருவாக்கியதால் தமிழகத்தில் உணவுப் பஞ்சம் ஏற்படவில்லை.

குடிசைப் பகுதிகள் இல்லா தமிழகம் என்ற கொள்கையை வகுத்தார் கருணாநிதி. தமிழக கட்டிட வடிவமைப்பில் நவீனங்களைப் புகுத்தினார். 1971-ல் முதன்முதலாக சிப்காட் தொழில் வளாகங்கள் உருவாக்கினார். 1997-ல் கார் தொழிற்சாலைகளை உருவாக்கி “இந்தியாவின் டெட்ராய்ட் சென்னை" எனப் புகழ்பெறச் செய்தவர் கருணநிதி.

நெடுஞ்சாலைத் துறையை நவீனமயமாக்கி, தமிழகத்தில் முதன்முதலில் மேம்பாலங்கள் அமைத்து, நெடுஞ்சாலையை நவீனப்படுத்தினார். தகவல் தொழில்நுட்பக் கொள்கையை உருவாக்கி, தமிழக இளைஞர்கள் ஐ.டி. தொழிலில் ஆதிக்கம் செலுத்தும் நிலையை ஏற்படுத்தினார். அனைத்தையும் நவீனமயமாக்கிய சிற்பி கருணாநிதி என்று உறுதியாக கூறலாம். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

கருணாநிதி முதல்வராகவும், பொதுப்பணித் துறை அமைச்ச ராகவும் இருந்த காலத்தில் கட்டப்பட்ட முக்கியமான கட்டிடங்கள்,கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றின் நோக்கம், பயன்பாடுகள் உள்ளிட்ட விவரங்களைத் தொகுத்து டிஜிட்டல் ஆவணம் உருாவக்க வேண்டும். அப்போதுகட்டப்பட்ட 100 கட்டிடங்களின் புனரமைப்பு மற்றும் சீரமைப்புப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான காலஅளவு, நிதியை நிர்ணயிக்க வேண்டும்.

கருணாநிதி காலத்து கட்டிடப் பணிகள் குறித்து சாதனைக் கூட்டங்கள், விழாக்கள் நடத்துவதுடன், குறும்படங்கள் வெளியிட வேண்டும். முக்கியக் கட்டிடங்களில் மின் ஒளிவிளக்கு அலங்காரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட முடிவுகள் இக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x