Published : 24 Jul 2023 10:45 PM
Last Updated : 24 Jul 2023 10:45 PM

நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படாது - சட்ட அமைச்சரிடம் தலைமை நீதிபதி உறுதி

சென்னை: நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏற்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நீதிமன்றங்களில் டாக்டர் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படும் என்ற செய்தி பரவியதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி நீதியரசர் சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலாவை சந்தித்து இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டேன்.

தலைமை நீதிபதியிடம் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டினை கடிதம் வழங்கி நேரில் வலியுறுத்தினேன். தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டைக் கேட்டறிந்த தலைமை நீதிபதி, நீதிமன்றங்களில் எந்த தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை. தற்போது உள்ள நடைமுறையே தொடரும் (Status Quo to be continued) எனத் தெரிவித்தார். இத்தகவல் வழக்கறிஞர் மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னணி: ‘தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் காந்தி, திருவள்ளுவர் தவிர்த்து வேறு எந்த தலைவர்களின் சிலைகள், படங்களையும் வைக்க கூடாது’ என்று அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியதாக தகவல் வெளியானது. இதனை தமிழக அரசியல் கட்சிகள் கடுமையாக கண்டித்திருந்தன.

பாமக, விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், நாம் தமிழர் ஆகியவை தங்களின் கண்டனத்தை பதிவு செய்திருந்தன. மேலும் தமிழக அரசு தலையிட்டு டாக்டர் அம்பேத்கரின் உருவப்படம், சிலைகள் நீதிமன்ற வளாகங்களில் இடம்பெறுவதை உறுதி செய்வதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x