Published : 24 Jul 2023 01:58 PM
Last Updated : 24 Jul 2023 01:58 PM
சென்னை: சென்னைக்கு அருகில் விளையாட்டு நகரம் அமைப்பது தொடர்பாக சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு தலைமையில் இன்று (ஜூலை 24) சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 274-ஆவது குழுமக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பொதுமக்களின் போக்குவரத்து இணைப்பினை மேம்படுத்துதல், சென்னை தீவுத் திடலை மேம்படுத்துதல், விளையாட்டு நகரம் அமைத்தல், சென்னை மாநகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்த நிதியளித்தல் போன்றவை குறித்தும், சென்னை பெருநகர எல்லைக்குள் நில உபயோக மாற்ற விண்ணப்பங்களின் மீது பரிசீலித்தும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
மேலும், அமைச்சரால், 2023-2024-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் மீதான தொடர் நடவடிக்கைகள் குறித்தும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிர்வாக நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இக்குழுமக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ். முருகன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை சிறப்பு செயலாளர் பூஜா குல்கர்னி, சட்டமன்ற உறுப்பினர்கள் (மாதவரம்) எஸ்.சுதர்சனம், (திரு.வி.க.நகர்) தாயகம் கவி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் பொ.சங்கர், சி.எம்.டி.ஏ முதன்மை செயல் அலுவலர் கவிதா ராமு, நகர் ஊரமைப்பு இயக்கக இயக்குநர் பா.கணேசன், குழும உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்புடைய செய்திக் கட்டுரைகள்: சென்னை அருகே மெகா விளையாட்டு நகரம்: சாத்தியக்கூறுகள் உள்ள 3 இடங்கள் தேர்வு | சென்னை தீவுத் திடலில் பார்முலா 4 கார் பந்தய மைதானம்: சிஎம்டிஏ திட்டம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT