Published : 24 Jul 2023 11:21 AM
Last Updated : 24 Jul 2023 11:21 AM
தருமபுரி: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்களை பதிவேற்றும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தருமபுரியில் இன்று (ஜூலை 24) தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று, மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்றது.
தமிழக அரசின் நிதிநிலை நெருக்கடியால், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற முடியாத சூழல் நிலவியது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வந்தன. இதுகுறித்து கேள்வி எழும்போதெல்லாம் ‘விரைவில் திட்டம் நிறைவேற்றப்படும்’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து வந்தார். கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார்.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி மகளிர் நலன் காக்க நிறைவேற்றிய திட்டங்களைப் போற்றும் வகையில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு `கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்' என்று பெயரிடப்பட்டது.
மேலும், நடப்பாண்டு தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தில், மகளிர் உரிமைத்தொகை திட்டம், அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியானவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டன.
இந்த திட்டம் மூலம் முதல் கட்டமாக சுமார் ஒரு கோடி மகளிரின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை நேரடியாக செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கடை பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று, மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன்களை விநியோகம் செய்து வருகின்றனர். விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெறும் இடம், நாள், நேரம் உள்ளிட்ட தகவல்கள், அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த திட்டத்துக்கான விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய தமிழகம் முழுவதும் 36 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் விண்ணப்பங்களைப் பதிவேற்றும் பணி நடைபெறுகிறது. தொடர்ந்து, தகுதியான மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும்.
இந்த முகாமை முதல்வர் மு.க.ஸ்டா லின் தருமபுரி மாவட்டத்தில் இன்று தொடங்கி வைத்தார். தருமபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யும் பணியைத் தொடங்கிவைத்து, மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் கலந்துரையாடினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT