Published : 24 Jul 2023 01:54 PM
Last Updated : 24 Jul 2023 01:54 PM
ராமேசுவரம்: தனுஷ்கோடி, தலைமன்னார் இடையே பாலம் அமைக்க இந்தியா - இலங்கை இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக ஜூலை 20-ல் புதுடெல்லி வந்தார். பிரதமர் மோடியுடனான அவரது சந்திப்பின் போது தனுஷ்கோடி இலங்கை தலை மன்னார் இடையே பாலம் அமைக்கும் திட்டம் கவனம் பெற்றுள்ளது.
ஒரே பயணச் சீட்டில் பயணம்: இந்தியா - இலங்கை இடையே ரயில் மற்றும் கப்பல் என ஒருங்கிணைந்த போக்குவரத்தை ஆங்கிலேயர்கள் தனுஷ்கோடி - இலங்கை தலைமன்னார் இடையே 24.02.1914-ல் தொடங்கினர். இதற்காக பாம்பன் ரயில் பாலமும், தனுஷ்கோடி, தலை மன்னார் துறைமுகங்களும் அமைக்கப்பட்டன.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தனுஷ்கோடிக்கு ரயில் பயணம், அதைத் தொடர்ந்து தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு கப்பல் பயணம், மீண்டும் தலைமன்னாரில் இருந்து கொழும்புக்கு ரயில் பயணம் செய்ய ஒரே பயணச்சீட்டு எடுத்தால் போதும். 1964 டிசம்பரில் தனுஷ்கோடியை நிலைகுலையச் செய்த புயலைத் தொடர்ந்து 1965-ல் மீண்டும் ராமேசுவரத்தில் இருந்து இலங்கை தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கியது.
பின்னர் இலங்கையில் உள்நாட்டு போரால் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 2015-ம் ஆண்டில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிபராக மைத்ரிபால சிறிசேனா, பிரதமராக ரணில் விக்ரமசிங்க வந்ததும் இந்திய அரசு தனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக பாலம் அமைக்கும் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது.
மேலும் இந்தப் பாலம் அமைக்க ரூ. 22 ஆயிரம் கோடி நிதியை வழங்க ஆசிய வளர்ச்சி வங்கியும் முன்வந்தது. ஆனால் இத்திட்டத்தில் இலங்கை அரசு அப்போது ஆர்வம் காட்டவில்லை. உலகளாவிய கரோனா பரவலால் 2020 மார்ச்சில் இலங்கையின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகித்த சுற்றுலா, தேயிலை உற்பத்தி மற்றும் ஆடை தயாரிப்பு ஆகிய மூன்றும் முற்றிலுமாகப் பாதிப்படைந்தது.
இதனால் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கினர். அதன்பிறகு பிரதமர் மகிந்த ராஜபக்ச, அதிபர் கோத்தபய ராஜபக்ச அடுத்தடுத்து பதவி விலகி புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கவும், பிரதமராக தினேஷ் குணவர்தனவும் பதவி வகித்து வருகின்றனர்.
இலங்கை அரசு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் இலங்கையிலிருந்து தமிழகப் பகுதிகளுக்கு கப்பல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து தொடங்க முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மேலும் தனுஷ்கோடிக்கும் இலங்கையில் உள்ள தலை மன்னாருக்கும் இடையே பாலம் அமைப்பதற்கான திட்டம் குறித்த பேச்சு வார்த்தைகளும் மீண்டும் இலங்கை தரப்பிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது.
கடலில் பாலம் சாத்தியமா?: தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே 13 மணல் தீடைகள் உள்ளன. தனுஷ்கோடியிலிருந்து முதல் 6 ஆறு மணல் தீடைகள் இந்தியாவுக்கும், 7-லிருந்து 13-வது தீடை வரை இலங்கைக்கும் சொந்தமானது. ஒவ்வொரு மணல் தீடையும் குறைந்தது 1 கி.மீ தூரம் கொண்டவை. மேலும் இந்த கடற்பகுதி ஆழம் குறைவானதும் கூட.
இந்தப் பாலம் கடல் மேலும், மணல் தீடைகளிலும் அமையலாம். பிரிட்டனின் போல்ஸ்டோன் நகரில் இருந்து பிரான்சின் கிளாசிஸ் நகருக்கு கடலுக்கு அடியில் சுமார் 50 கி.மீ. தொலைவுக்கு "டன்னல்" எனப்படும் சுரங்கப்பாதை அமைத்து சாலை மற்றும் ரயில் போக்குவரத்து 1994-ம் ஆண்டிலிருந்து நடந்து வருகிறது.
அது போல தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே கடலடியில் சுரங்கப்பாதை அமைக்கவும் முடியும். இந்தப் பாலம் மட்டும் அமைந்தால் நீண்ட கலாச்சார வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட இந்தியா - இலங்கை இடையே பயணிகள் போக்குவரத்து, சுற்றுலா மட்டுமின்றி, வர்த்தகமும் மேம்படும். மேலும் சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் என்ற பாரதி கண்ட கனவும் நிறைவேறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT