Published : 03 Nov 2017 09:04 AM
Last Updated : 03 Nov 2017 09:04 AM
மாநிலங்களின் எல்லைகள் பிரித்து வரையறுக்கப்பட்ட நாளை கடந்த நவம்பர் 1-ம் தேதி ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநில அரசுகள் விமரிசையாகக் கொண்டாடிய நிலையில், தமிழகத்தில் அதை கவுரவிக்கும் வகையில் அரசு சார்பில் அறிக்கை கூட விடப்படவில்லை. மாநில உணர்வும், மொழி உணர்வும் தமிழகத்தில் கேள்விக்குறியாகிவரும் சூழலில், வருங்காலத்திலாவது தமிழக அரசு சார்பில் நவம்பர் 1-ம் தேதி ‘ஒருங்கிணைந்த தமிழகம்’ நாளாக கொண்டாடப்பட வேண்டும் என்கின்றனர் தமிழ் உணர்வாளர்கள்.
கடந்த 1956 நவம்பர் 1-ம் தேதி இன்றைய தமிழகம் அதன் எல்லைகளோடு பிரிக்கப்பட்டு அமைந்தது. இந்த நாளில்தான் குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இதற்காக ஏராளமான போராட்டங்களும் உயிர்த் தியாகங்களும் நடந்தன.
இதே நாளில்தான் தமிழகத்தைப் போலவே கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும் எல்லைகள் வரையறுக்கப்பட்டு மாநிலங்கள் உருவாகின. மேற்கண்ட மாநிலங்கள் அனைத்தும் இந்த நாளை அரசு முறை விழாவாக விமரிசையாகக் கொண்டாடி வருகின்றன.
கர்நாடக முதல்வர் பங்கேற்பு
குறிப்பாக, கர்நாடகாவில் இந்த நாளின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது. அங்கு நவம்பர் 1-ம் தேதி மாநில அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, பெங்களூரு ஸ்ரீ கன்டீரவா மைதானத்தில் ‘கர்நாடக ராஜ்யோத்சவா’ நிகழ்ச்சி நேற்று முன்தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. மாநில முதல்வர் சித்தராமய்யா கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் கர்நாடக மாநில கீதமான ‘ஜெயபாரத ஜனனிய தனுஜேட்’ பாடல் இசைக்கப்பட்டு, முன்னதாக கர்நாடக மாநிலக் கொடியான சிவப்பு, மஞ்சள் கொடி ஏற்றப்பட்டது. அதன் பின்னரே தேசியக் கொடி ஏற்றப்பட்டது. கன்னட கலை, பண்பாட்டு வளர்ச்சித் துறை சார்பில் பிரபல நாட்டுப்புற நாடக நிகழ்ச்சியான ‘பயலட்டா’ நாடகம் மற்றும் ‘துள்ளு குமிதா’, ‘வீரகேசே’ உள்ளிட்ட நாட்டுப்புற நடன கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. ஏராளமானோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பெங்களூரு பெருநகர மாநகராட்சியும் இந்த விழாவை உற்சாகமாகக் கொண்டாடியது. அரசு சார்பில் மட்டுமல்லாது, பொதுமக்களும் இந்த தினத்தை ஒரு பண்டிகைபோல வெகு உற்சாகத்துடன் கொண்டாடினர்.
இதுகுறித்து பெங்களூருவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் வா.மணிகண்டன் கூறியபோது, ‘‘கன்னடர்களைப் பொறுத்தவரை இந்த நாளே அவர்களது பிரதானக் கொண்டாட்ட நாளாகும். அன்றைய தினம் இருசக்கர வாகனங்கள் தொடங்கி ஆட்டோ, பேருந்து, லாரிகள் வரை கர்நாடக மாநிலக் கொடியான சிவப்பு, மஞ்சள் கொடிகள் பறக்கும். பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல் திரையரங்குகள், சிறு நிறுவனங்கள் வரை கட்டாய விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் உள்ளிட்ட அனைத்து மதத்தினரும் இந்த தினத்தை உற்சாகமாகக் கொண்டாடுகின்றனர்” என்றார்.
கேரளாவில் ‘பிறவி தினம்’
கேரளாவில் நவம்பர் 1-ம் தேதி அரசு விடுமுறை இல்லாவிட்டாலும், அரசு சார்பில் அன்றைய தினம் ‘கேரள பிறவி தினம்’ கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து பாலக்காடு மாவட்டத்தில் ஊராட்சித் துறையில் பணிபுரியும் பொறியாளர் பாலா கூறியபோது, “எல்லைகள் வரையறுக்கப்பட்டு கேரள மாநிலம் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 1-ம் தேதி அனைத்து பஞ்சாயத்துகளிலும் நீர்நிலைகளைப் பாதுகாக்கும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும், 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் மலையாள மொழியை ஆட்சி மொழியாக ஆக்கியதை நினைவுகூரும் விழா நடத்தப்பட்டது. தவிர, வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் திட்டமும், ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டன. சுகாதாரம், கல்வி, விவசாயம், வீட்டுவசதி ஆகிய முக்கிய 4 துறைகளில் அதிக கவனம் செலுத்தும் ‘நவ கேரளம் மிஷன்’ திட்டம்கூட கடந்த ஆண்டு இந்த நாளில்தான் தொடங்கப்பட்டது” என்றார்.
வட மாநிலங்களிலும் கோலாகலம்
ஆந்திராவில் கடந்த 2013-ம் ஆண்டு வரை நவம்பர் 1-ம் தேதி ‘விசால ஆந்திரா’ நாள் அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு, இந்த தினத்தை ஜூன் 2-ம் தேதிக்கு மாற்றி அமைத்து அந்த நாளில் அரசு விழாக்கள் நடக்கின்றன. தெலங்கானா மாநிலமும் ஜூன் 2-ம் தேதி மாநில நாள் கொண்டாடி வருகிறது. இதேபோல குஜராத், மகாராஷ்டிர மாநிலங்கள் மே 1-ம் தேதியும், ராஜஸ்தான் நவம்பர் 1-ம் தேதியும், உத்தரப் பிரதேசம் ஜனவரி 25-ம் தேதியும் கொண்டாடி வருகின்றன.
ஆனால், தமிழகத்தில் மட்டும் நவம்பர் 1-ம் தேதி அரசு சார்பிலும் எந்த விழாவும் கொண்டாடப்படுவதில்லை. இதனால் மக்களுக்கும் அந்த நாள் பற்றிய புரிதல் இல்லை.
இந்த நிலையில்தான் கடந்த நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் ‘மொழிவழி மாநிலம் அமைந்த நாள்’ நிகழ்ச்சி நடந்தது. இதுகுறித்து ‘தன்னாட்சி தமிழகம்’ கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினரான ஆழி செந்தில்நாதன் கூறும்போது, ‘‘தமிழகத்தில் மாநிலப் பிரிவினையின் போது எல்லைப் பகுதிகளை இழந்த தால் இந்த நாள் கொண்டாட்டமாக உணரப்படவில்லை. ஆனாலும், நவீன அரசியல் வரையறையோடு தமிழர்கள் தமக்கென ஒரு தாயகம் பெற்ற நாள் இது என்பதால் இந்த தினத்தைக் கொண்டாடுவது முக்கியமானது” என்கிறார்.
‘இனியாவது கொண்டாடுவோம்’
அதேநேரம், கடந்த 10 ஆண்டுகளாக இந்த நாளில் விழாக்களை நடத்தி வருவதாக கூறுகிறார் திமுக செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். அவர் கூறும்போது, ‘‘10 ஆண்டுகளுக்கு முன்பே ‘தமிழகம் 50’ ஆண்டுவிழாவை நான் எடுத்தேன். அப்போது ‘தமிழ்நாடு 50’ என்ற எனது நூலும் வெளியிடப்பட்டது. விழாவில் வடக்கு எல்லைப் போராட்டத் தியாகிகளான சிலம்புச் செல்வர் ம.பொ.சி, விநாயகம், மங்கலங்கிழார், தெற்கு எல்லையில் குமரி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்கப் பாடுபட்டபி.எஸ்.மணி, மார்ஷல் நேசமணி, குஞ்சன் நாடார், ரசாக், தாணுலிங்க நாடார், பொன்னப்ப நாடார், சிதம்பரநாதன் நாடார், செங்கோட்டையை தமிழகத்தோடு இணைக்கப் போரா டிய கரையாளர், ‘தமிழ்நாடு’ என்ற பெயர் கோரி உண்ணாவிரதம் இருந்த தியாகி சங்கரலிங்கனார் ஆகியோரது படங்களும் திறக்கப்பட்டன.
ஆனால், தமிழகத்தில் அரசு சார்பில் ஒரு அறிக்கைகூட விடாதது வருத்தம் அளிக்கிறது. அண்டை மாநிலங்கள் எல்லாம் இந்த விழாவைக் கொண்டாடிய நிலையில், பிரதமர் மோடியும் அந்த மாநிலங்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நாளை தமிழக அரசும், மக்களும் புறக்கணிப்பது வேதனை தருகிறது. கடந்த காலங்களில் எப்படியோ.. இன்றைக்கு தமிழகத்தின் மாநில உணர்வும், மொழி உணர்வும் திட்டமிட்டு சிதைக்கப்பட்டு வருகிறது. படிப்படியாக மாநிலத்தின் உரிமை கள் பறிக்கப்படுகின்றன. எனவே, இனியேனும் நவம்பர் 1-ம் தேதி அன்று தமிழக மாநில நாளாக தமிழக அரசும், பொதுமக்களும் உற்சாக மாக கொண்டாட வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT