Published : 24 Jul 2023 04:46 AM
Last Updated : 24 Jul 2023 04:46 AM
சென்னை: பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள 5 பேரின் வீடுகள், பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா, எஸ்டிபிஐ நிர்வாகிகளின் வீடுகள் உட்பட தமிழகத்தில் 21 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த திருபுவனம் மேலதூண்டில் விநாயகம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாமக முன்னாள் நகரச் செயலாளர் ராமலிங்கம். அப்பகுதியில் சிலர் மதமாற்றத்தில் ஈடுபட்டதை கண்டித்து வந்த ராமலிங்கம், கடந்த 2019 பிப்.5-ம் தேதி கொலை செய்யப்பட்டார்.
தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) இந்த வழக்கு மாற்றப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 18 பேரில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். 5 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கொலை தொடர்பாக சந்தேகத்துக்கு உரியவர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை மில்லத்நகரில் எஸ்டிபிஐ நிர்வாகி நைனா முகமது, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த தொரவிகிராமத்தில் அவரது தந்தை அப்துல்லாவிடம் விசாரணை நடந்தது.
கோவை கோட்டைமேடு ஹாஜி இப்ராஹிம் ராவுத்தர் வீதியில் அப்பாஸ், புதுக்கோட்டை உசிலங்குளத்தில் ரசித் முகமது, மதுரை மாவட்டம் பேரையூர் அடுத்த எஸ்.கீழப்பட்டியில் ராமன் என்ற அப்துல் ரசாக், திருப்பூர் 15 வேலம்பாளையம் ஜி.கே.கார்டன் 8-வது வீதியில் முபாரக் பாட்ஷா ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடந்தது. இவர்கள் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப்இந்தியா அமைப்பின் (பிஎஃப்ஐ) நிர்வாகிகளாக இருந்தவர்கள்.
தஞ்சாவூர் நடராஜபுரம் தெற்குகாலனியில் எஸ்டிபிஐ ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் பக்ருதீன், அதிராம்பட்டினம் தரகர் தெருவில் ஹாஜா அலாவுதீன், கும்பகோணம் அடுத்த திருவாய்ப்பாடியில் முகமது செரீப், திருமங்கலகுடியில் குலாம் உசேன், ராஜகிரியில் முகமது பாரூக் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடந்தது.
கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் திருபுவனம் முகமது அலிஜின்னா, கும்பகோணம் மேலக்காவேரி அப்துல் மஜீத், திருமங்கலகுடி நபீல்ஹாசன், சாகுல் ஹமீது, வடக்கு மாங்குடி புருகாதீன் ஆகிய 5 பேரின் வீடுகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
மயிலாடுதுறை தேரழந்தூர் தெற்கு பட்டக்கால் தெருவில் நிசார் அகமது, திருச்சி பீமநகர் பண்டரிநாதபுரம் பகுதியில் ஏசி மெக்கானிக் அப்சல்கான், உசிலம்பட்டி அடுத்த தொட்டப்பநாயக்கனூர் காமராஜ் நகரில் எஸ்டிபிஐ நிர்வாகி ஜாகீர் உசேனின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் 21 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில்செல்போன்கள், பென்டிரைவ், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
எஸ்டிபிஐ மாநில தலைவர் முபாரக் வீட்டில் சோதனை: திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் ஹக் காலனியில் உள்ள எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முபாரக் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிகாலை 5.50 மணி முதல் காலை 9.30 மணி வரை சோதனை நடத்தினர். பின்னர், அவரது செல்போனை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த எஸ்டிபிஐ கட்சியினர் அவரது வீடு அருகே திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி முபாரக் கூறும்போது, ‘‘சிறுபான்மை இயக்கங்களை அடக்க, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் விசாரணை நடத்தப்படுகிறது. எஸ்டிபிஐ-க்கும், இந்த வழக்குக்கும் தொடர்பு இல்லை. வழக்கை நீதிமன்றத்தில் சந்திப்போம்’’ என்றார்.
என்ஐஏ சோதனைக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT