Last Updated : 24 Jul, 2023 08:30 AM

 

Published : 24 Jul 2023 08:30 AM
Last Updated : 24 Jul 2023 08:30 AM

தீர்த்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை.. சங்கு பிறக்கும் சங்குதீர்த்த குளத்தை பாதுகாக்க கோரிக்கை

திருக்கழுகுன்றம்: திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலின் சங்குதீர்த்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறக்கும் வைபவம் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக குளத்தில் செடி, கொடி, பாசிகள் அதிகம் நிறைந்துள்ளதால் சங்குதென்படுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், குளத்தில் பொதுமக்களை அனுமதிக்காமல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் கோருகின்றனர்.

திருக்கழுகுன்றம் நகரில் பிரசித்திபெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் மற்றும் தாழக்கோயில் எனப்படும் பக்தவச்சலேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இதில், தாழக்கோயிலின் கிழக்கு ராஜகோபுரம் சந்நிதி தெருவின் கடைசி பகுதியில் 12 ஏக்கர் பரப்பளவில் சங்கு தீர்த்த குளம் அமைந்துள்ளது. இதன் புரான வரலாறு சுவரசியமானது.

மார்கண்டேயர் அனைத்து சிவாலயங்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு, வேதகிரீஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்ததாகவும் அப்போது, சிவ பெருமானை வழிபடுவதற்காக தீர்த்தம் எடுக்க பாத்திரம் இல்லாததால், இக்குளத்தில் தீர்த்த பாத்திரம் வேண்டி சிவபெருமானை வணங்கியதாவும். இதையடுத்து, குளத்தில் சங்கு ஒன்று பிறந்து கரை ஒதுங்கியதாகவும் இந்த சங்கை சுவாமியே வழிபாட்டுக்கு வழங்கியதாகவும் தல வரலாறு கூறுகிறது. இதன்மூலம், இக்குளத்துக்கு சங்குதீர்த்த குளம் என பெயர் பெற்றுள்ளது.

மேலும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்குதீர்த்த குளத்தில் சங்கு பிறக்கும் வைபவம் நடைபெற்று வருகிறது. இவ்வாறு பிறக்கும் சங்கு குளத்தில் கரை ஒதுங்கியதும், கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஆராதனைகள் மற்றும் வழிபாடுகளுடன் சங்கு ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும், கார்த்திகை மாதத்தின் கடைசி சோமவாரம் (திங்கள்கிழமை) நாளில் மலைமீது வேதகிரீஸ்வரருக்கு நடைபெறும் 1008 சங்காபிஷேகத்தில் குளத்தில் பிறந்த சங்குமுதன்மை பெறும். கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ம்தேதி சங்குதீர்த்த குளத்தில் சங்கு பிறந்தது.

உப்புநீரில் சங்கு உற்பத்தியாகும் என்ற நிலையில், குளத்து நன்னீரில் சங்கு பிறப்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. இதனால், வேதகிரீஸ்வரரை தரிசிக்க வரும் வடமாநில பக்தர்கள் உட்பட அனைவரும் இக்குளத்தில் நீராடி மலையைகிரிவலம் வந்து சுவாமியை வழிபடுகின்றனர். மேலும், ஏற்கெனவே குளத்தில் பிறந்த சங்குகளை பக்தர்கள் தரிசிப்பதற்காக கோயிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், 2011-ம் ஆண்டு சங்கு பிறந்த நிலையில் மீண்டும் சங்கு பிறப்பதற்கான 12-ம் ஆண்டு தற்போது நடைபெறுவதால், விரைவில் குளத்தில் சங்கு பிறக்கும் வழிபாடு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சங்கு தீர்த்த குளத்தை கோயில் நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் குளத்தில் கொடி பாசி படர்ந்தும் அல்லிகொடிகள் நிறைந்தும் காணப்படுகின்றன.

இதனால், குளத்தில் பிறக்கும் சங்கு கரை ஒதுங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் ஐயம் தெரிவித்துள்ளனர். எனவே, பிரசித்தி பெற்ற சங்கு பிறக்கும் வைபவம் நடைபெறும் வரையில் குளத்தின் உள்ளே மக்கள் செல்வதை தடுத்து, முறையான கண்காணிப்பு பணிகளை அறநிலையத் துறை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செந்தில்

இதுகுறித்து, உள்ளூரை சேர்ந்த செந்தில் கூறியதாவது: கடந்த காலங்களில் குளத்தில் பாசிகள் ஏதும் இன்றி தூய்மையாக காணப்பட்டது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் இல்லாததால் குளத்தில் கழிவுநீர், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி கடும் துர்நாற்றம் வீசும் குளமாக மாறியது. தற்போது குளத்தில் வலை வீசி மீன் பிடிக்கின்றனர்.

இதனால், சங்கு பிறப்பதற்கு காரணமான சங்கு பூச்சிகள் வலையில் சிக்கி அழிந்துவிடும் அபாயம் உள்ளது. மேலும், ஒருசில வாரங்களில் சங்கு பிறக்கும் நிலை உள்ளதால், குளத்தில் பாசியை அகற்றினால் பாசியில் சிக்கி சங்குகாணாமல்போகலாம். அதேவேளையில் படர்ந்துள்ள பாசியினால் சங்கு வெளிப்படுவதிலும் சிக்கல் உள்ளது.

அதனால், பாரம்பரிய வைபவத்துக்கு கலங்கம் ஏற்படாத வகையில், சங்கு பிறக்கும் வைபவம் நடைபெறும் வரையிலாவது பக்தர்கள் உட்பட யாரையும் குளத்துக்குள் அனுமதிக்காமல், கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

இதுகுறித்து, வேதகிரீஸ்வரர் கோயில் செயல்அலுவலர் பிரியா கூறும்போது, "சங்குதீர்த்த குளத்தின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x