Last Updated : 30 Nov, 2017 09:39 AM

 

Published : 30 Nov 2017 09:39 AM
Last Updated : 30 Nov 2017 09:39 AM

எழும்பூர் நீதிமன்றத்துக்கு ரூ.19 கோடியில் புதிய 5 மாடிக் கட்டிடம்: பணிகள் நிறைவடைந்த நிலையில் ஜனவரியில் திறக்க ஏற்பாடு

சென்னை எழும்பூர் நீதிமன்றத்துக்கு ரூ.19 கோடியே 37 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட பணிகள் நடைபெறும் இக்கட்டிடம், அடுத்த ஆண்டு ஜனவரியில் திறக்கப்படவுள்ளது.

சென்னை எழும்பூரில், ஆதித்தனார் சாலையில் எழும்பூர் நீதிமன்ற வளாகம் 2.85 ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு நூற்றாண்டு பழமையான கட்டிடம் மற்றும் பல்வேறு சிறிய கட்டிடங்களில் சென்னை பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கூடுதல் நடுவர் நீதிமன்றம், பொருளாதார குற்றப் பிரிவு நீதிமன்றங்கள் செயல்பட்டு வந்தன.

போதிய இடவசதி இல்லாததால், இந்த வளாகத்தில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் நவீன நீதிமன்றங்கள் கட்டித்தர வேண்டும் என்று வழக்கறிஞர்களும், பொதுமக்களும் நீண்டகாலமாக கோரி வந்தனர்.

இதையடுத்து எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் புதிய நீதிமன்றக் கட்டிடம் கட்டுவதற்காக தமிழக அரசு இரண்டு கட்டங்களாக ரூ.19 கோடியே 37 லட்சம் நிதி ஒதுக்கியது. புதிய கட்டிடம் கட்டுவதற்கு வசதியாக இங்கு செயல்பட்டு வந்த நீதிமன்றங்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள மூர் மார்க்கெட் (அல்லிக்குளம்) வளாகத்துக்கு மாற்றப்பட்டன. 2015-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் எழும்பூர் நீதிமன்றங்கள் அங்கு செயல்பட்டு வருகின்றன.

இதனிடையே எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் புதிய நீதிமன்றக் கட்டிடம் கட்டும் பணி 2015-ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கியது. 10 ஆயிரத்து 560 சதுர மீட்டரில் தரைத்தளம் மற்றும் 5 மாடிகளுடன் புதிய நீதிமன்றக் கட்டிடம் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 12 நீதிமன்ற அரங்குகள் (Court Halls), நீதிமன்ற அலுவலகம், ஆவணங்கள் பாதுகாப்பு அறைகள், சொத்து பாதுகாப்பு அறைகள் ஆகியன நவீன முறையில் கட்டப்பட்டுள்ளன. குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பிட வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “சென்னை எழும்பூர் புதிய நீதிமன்றக் கட்டிடம் நவீன முறையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன.

அடுத்த மாத இறுதியில் இப் பணிகள் முடிவடையும். அடுத்த ஆண்டு ஜனவரியில் நீதிமன்றங் கள் செயல்படத் தொடங்கும். நீதிமன்றங்கள் இங்கு செயல்படுவது குறித்து விரைவில் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.

இந்த வளாகத்தில் உள்ள பாரம்பரியமிக்க கட்டிடம் அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது” என் றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x