Published : 23 Jul 2023 06:31 PM
Last Updated : 23 Jul 2023 06:31 PM

சென்னை | போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம்

விழிப்புணர்வை ஏற்படுத்தும் காவலர்கள்

சென்னை: சென்னையில் இந்தாண்டின் ஜூன் மாதம் வரை சாலை விபத்தில் 241 பேர் மரணம் அடைந்துள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: "சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் துரதிருஷ்டவசமானவை; கவலைக்குரியவை. கடந்த 2021 ஆம் ஆண்டு சாலை விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 573க இருந்தது. 2022இல் அது 508 ஆகக் குறைந்தது. இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் 241 நபர்கள் சாலை விபத்துக்களால் உயிரிழந்துள்ளனர்.

சென்னை பெருநகரில் சாலையைப் பயன்படுத்துபவர்களுக்கு போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இறப்பு விகிதம் குறைந்துள்ளது. இருந்தபோதிலும், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் அரசுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த கவலையளிப்பதாகவே இருந்து வருகிறது. அரசின் தெளிவான வழிகாட்டுதலைப் பின்பற்றி, விபத்துகளைத் தவிர்க்கவும், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதற்கான நடைமுறைகள் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இதற்கான செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையானது நேற்று (ஜூலை 22 ) நகரின் 3 முக்கிய இடங்களில் அதாவது ஸ்பென்சர் சந்திப்பு, அண்ணா ரோட்டரி, ஈகா சந்திப்பு ஆகிய இடங்களில் 100 ஆயுதப்படை காவலர்கள் மற்றும் 50 போக்குவரத்து வார்டன்களுடன் சாலைப் பயனாளிகளுக்காக விழிப்புணர்வு சிறப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தலைக்கவசம் அணிவது, சீட் பெல்ட் பயன்படுத்துவது, அதிவேகமாக வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது, மது போதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது, இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் பயணம் செய்வதை தவிர்ப்பது, போக்குவரத்து நிறுத்தற் கோட்டினை கடைப்பிடிப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x