Published : 23 Jul 2023 03:11 PM
Last Updated : 23 Jul 2023 03:11 PM

பாஜக சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது: அமைச்சர் சேகர்பாபு

அமைச்சர் சேகர் பாபு

சென்னை: பாஜக சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு திமுக சார்பில் அயனாவரத்தில் 160 திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ராஜன் மற்றும் பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜன் ஆகியோர் வழங்கினர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, திமுகவில் உள்ளவர்கள் ரவுடிகள் என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா பேச்சுக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, "இந்தாண்டு மட்டும் சமூக விரோதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பட்டியலை பார்த்தால் பாஜகவினரே அதிகமாக இருப்பார்கள். பாஜக சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. தினமும் அவதூறுகளை பரப்பி, சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பது , மதவாதத்தைத் தூண்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தடுக்க கைது நடவடிக்கை, குற்ற நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொண்டு வருகிறார். திமுகவினர் மீதும் கூட கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் நடைபயணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, "நூறு அண்ணாமலை வந்தாலும் தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். நடைபயணத்தில் வைக்கப்படும் புகார் பெட்டியில் பாஜக சமூக விரோதிகளின் கூடாறமாக மாறியுள்ளதால், பாஜகவினர் ஒவ்வொரு மாவட்டங்களில் செய்து வரும் கட்டப்பஞ்சாயத்து, ரவுடிதனத்தை மக்கள் புகார் பெட்டியில் தெரிவிப்பார்கள்" என்று கூறினார்.

சென்னையில் மழைநீர் வடிகால் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், "பருவ மழைக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மீதமுள்ள 85 கிலோ மீட்டருக்கான மழை நீர் வடிகால் பணிகள் 248 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும். மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிக்கப்படாத இடங்களில் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்தாண்டுகளில் மழைநீர் தேங்கிய இடங்களை விட இந்தாண்டு 60% வரை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் தயாராக உள்ளது" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x