Published : 23 Jul 2023 11:51 AM
Last Updated : 23 Jul 2023 11:51 AM
சென்னை: எஸ்டிபிஐ மாநில தலைவர் வீட்டில் என்ஐஏ சோதனை நடத்துவது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கையில், "எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வீடு உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றார்கள். திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையை எஸ்டிபிஐ கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இது அரசியல் பழிவாங்கும் மற்றும் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் மத்திய அரசின் ஏவல் நடவடிக்கையாகும்.
கடந்த 15 ஆண்டுகளாக மக்கள் நல அரசியலை முன்னெடுத்துவரும் எஸ்டிபிஐ கட்சி தேர்தல் அரசியல், போராட்ட அரசியல் மட்டுமின்றி பேரழிவு காலங்களிலும் மக்கள் நலனுக்காக களத்தில் முன்னணியில் நின்று போராடிக்கொண்டிருக்கிறது. ஆளும் அரசுகளின் கவனத்துக்கு மக்கள் பிரச்சினைகளை கொண்டு செல்வதில் முன்னணியில் இருக்கின்றது. இது தமிழ்ச் சமூகம் அறிந்த விசயம். பசியிலிருந்து விடுதலை, பயத்திலிருந்து விடுதலை என்ற கொள்கை முழக்கத்தோடு ஜனநாயக முறையில் செயல்பட்டுவரும் எஸ்டிபிஐ கட்சியின் அரசியல் நிலைப்பாடு மிகத் தெளிவானது.
இந்த சூழலில் எஸ்டிபிஐ கட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்த வேண்டும், மக்களிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் மத்திய அரசு தனது ஏவல்துறையான என்ஐஏ மூலம் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக நாங்கள் குற்றம் சாட்டுகின்றோம். ஒரு தெளிவான, வெளிப்படையான மக்களுக்கான அரசியலில் ஈடுபட்டுவரும் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் வீட்டில் நடைபெற்றுவரும் இத்தகைய சோதனை நடவடிக்கை என்பது ஜனநாயக விரோதமானது; வன்மையாக கண்டிக்கத்தக்கது. எஸ்டிபிஐ கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் நடைபெற்றுவரும் இத்தகைய அடக்குமுறைகளை சட்டரீதியாக எஸ்டிபிஐ. கட்சி எதிர்கொள்ளும். மத்திய அரசின் ஏவல்துறையான என்ஐஏவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழ்ச்சமூகமும், அனைத்து ஜனநாயக சக்திகளும் வலுவாக குரலெழுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT