Published : 23 Jul 2023 08:52 AM
Last Updated : 23 Jul 2023 08:52 AM

புதிய தொழில்நுட்பங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டால் சட்டம் பாதுகாக்கும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உறுதி

சென்னை ஐஐடியின் 60-வது பட்டமளிப்பு விழாவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங் களை வழங்கினார். உடன் ஐஐடி நிர்வாக குழு தலைவர் பவன் கோயங்கா, இயக்குநர் வி.காமகோடி. படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: புதிய தொழில் நுட்பங்கள் தவறாகப் பயன்படுத்தப் படுவதை தடுக்க முடியாத சூழலில் சட்டமே உள் நுழைந்து தனி மனிதர்களைப் பாதுகாக்கும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் உறுதிபட தெரிவித்தார்.

சென்னை ஐ.ஐ.டி-யின் 60-வது பட்டமளிப்பு விழா கிண்டியில் உள்ள அதன் மைய வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு சென்னை ஐஐடி நிர்வாகக் குழு தலைவர் பவன் கோயங்கா தலைமை தாங்கினார். முன்னிலை வகித்த இயக்குநர் வி.காமகோடி, ஆண்டறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றினார்.

தொடர்ந்து இளநிலை, முது நிலை, ஆய்வு படிப்புகளை முடித்த 2,572 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இது தவிர இந்திய குடியரசுத் தலைவர் விருது மாணவர் சாய் கவுதம் ரவிபதி, வி.ஸ்ரீனிவாசன் நினைவு விருது நேகா சுவாமி நாதன், டாக்டர் சங்கர் தயாள் சர்மா விருது ஷடாக்ஷி சாரங்கி, கவர்னர் விருது பிரஹலாத் ஆகிய மாணவர்களுக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் பேசியதாவது: கடந்த 64 ஆண்டுகளாக கல்வி, ஆராய்ச்சி, தொழில் நுட்பம் என பல்வேறு அம்சங்களில் சிறந்த பங்களிப்பை சென்னை ஐ.ஐ.டி வழங்கி வருகிறது. இன்றைய நவீன தொழில் நுட்ப வேகத்துக்கு சட்டத்துறையால் ஈடு கொடுக்க முடியாது என்று பலர் கருது கின்றனர்.

ஆனால், சட்டம், தொழில் நுட்பம் ஆகியவை ஒன்றின் வளர்ச்சிக்கு மற்றொன்று உதவியாக இருந்துள்ளன என்பதற்கு நமது வரலாறு ஒரு சான்றாகும். மாணவர்களிடம் இரண்டு கேள்விகளை முன்வைக்கிறேன். உங்கள் தொழில் நுட்பத்தின் மதிப்பீடுகள் என்ன? அதற்காக இழக்கப் போவது என்னென்ன? என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தொழில் நுட்பம் என்பது இந்த சமூகத்தின் வெற்றிடத்தில் அமைவதல்ல. நமது சட்டம், பொருளாதாரம் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. உங்கள் கண்டுபிடிப்பும் ஒரு நாள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படலாம். எனவே, தங்களின் ஆராய்ச்சிகள் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உறுதி செய்து அதற்கான எல்லையை வரையறுக்க வேண்டும்.

மேலும், உங்கள் கண்டுபிடிப்பு இந்த சமூகத்தில் பயன்படுத்தப்படும்போது அது மனித நலனுக்கானதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பும் தனி மனிதர்களை பாதிக்க வாய்ப்புள்ளது. மனிதர்களை ஒன்றிணைக்க உருவாக்கப்பட்ட சமூக ஊடகங்களில் தற்போது இணைய சீண்டல்களும் நடைபெறுகின்றன.

இதுவே, தொழில் நுட்பமும், சட்டங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை உணர்த்துகிறது. புதிய தொழில் நுட்பங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுக்க முடியாத சூழலில் சட்டமே உள்ளே நுழைந்து, தனி மனிதர்களைப் பாதுகாக்கும். தற்போதைய செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பமும் பல்வேறு துறைகளில் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கிவிட்டது.

உச்ச நீதிமன்றத்திலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை சில பணிகளில் பயன்படுத்த உள்ளோம். அதே நேரம் இந்த செயற்கை நுண்ணறிவு, மனிதர்களுக்கு எதிராக திரும்பி விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், செயற்கை நுண்ணறிவு மூலம் போலியான புகைப்படங்களை உருவாக்குதல் போன்ற தவறுகளை செய்ய முடியும்.

எனவே, அதற்கான வரையறைகளை நாம் வகுக்க வேண்டியது அவசியம். நவீன தொழில் நுட்பங்கள் ஏழை மக்களை சென்றடைந்து பயனளிக்க வேண்டும். மேலும், எதிர்காலத்தில் மனித சமுதாய வளர்ச்சியில் அறிவியலும், தொழில் நுட்பமும் முக்கிய பங்கு வகிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x