Published : 23 Jul 2023 03:45 AM
Last Updated : 23 Jul 2023 03:45 AM

தமிழகத்தின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

மயிலாடுதுறை: பாபநாசம் ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை-மைசூர் விரைவு ரயில் நின்று செல்வதற்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் எம்.எஸ். அன்பழகன் தலைமை வகித்தார். மாநிலங்களவை எம்.பி எஸ். கல்யாணசுந்தரம், பாபநாசம் பேரூராட்சி தலைவர் க.பூங்குழலி முன்னிலை வகித்தனர். மத்திய தகவல் ஒலிபரப்பு துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் ரயிலை கொடியசைத்து வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், "இந்தியாவில் ரயில்வே துறை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. இந்த துறை தொடர்பாகத் தமிழ்நாட்டிலிருந்து செல்லும் அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை மத்திய அரசால் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிதியாண்டில் ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, சென்னை எழும்பூர், கன்னியாகுமரி ஆகிய 5 ரயில் நிலையங்களுக்கு ரூ. 1900 கோடி மதிப்பில் சர்வதேச அளவில் தரம் உயர்த்துவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் அம்ரூத் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 73 ரயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய ரயில் நிலையங்கள் தலா ரூ. 10 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படுகிறது.

கிராமங்களில் விளையும் பொருட்கள் நகரப் பகுதிகளுக்குச் செல்லும் வகையில் இந்த ரயில் நிலையத்தில் வாழைப் பழம் மற்றும் ஆர்கானிக் பொருட்கள் விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக கடல்பாசிக்காக ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ரூ.126 கோடி மதிப்பில் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது. தமிழக அரசு அதற்கான திட்ட அறிக்கையை வழங்கி, மத்திய அரசும் ஒப்புதல் வழங்கிவிட்டது. இந்த கடல் பாசி அனைவருக்கும் பயன்படுவதால், அதனை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்" எனத் தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து மாநிலங்களவை எம்.பி., எஸ்.கல்யாணசுந்தரம் பேசுகையில், "2028-ம் ஆண்டு மாசி மகாமக விழா நடைபெறவுள்ளதால் இந்த விழாவை தேசிய விழாவாக அறிவிக்க வேண்டும். மேலும், விழுப்புரம்-தஞ்சாவூர் இடையே இரட்டை ரயில் பாதையும், கும்பகோணம்-விருத்தாசலம் இடையே புதிய ரயில் பாதை சேவை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதேபோல் திருநாகேஸ்வரம், சாலியமங்கலம் உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களின் அருகில் அதிகமான இடங்கள் காலியாக கிடக்கின்றது. இதனைத் தானியங்களை சேமிக்கும் வகையில் குடோன்களை கட்ட வேண்டும். மேலும், நெல் போன்ற தானியங்களைச் சேமிக்கத் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப்பக் கழகத்துக்கு வாடகைக்கு விட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x