Published : 22 Jul 2023 04:12 PM
Last Updated : 22 Jul 2023 04:12 PM
கலவையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாராமல் தண்ணீரின்றி உள்ள ஏரியை சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலவை வட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் பெரும்பாலான மக்களின் முக்கிய தொழிலாக விவசாயம் மற்றும் அதைச்சார்ந்த தொழில்கள் உள்ளன. சுமார் 511.27 ஹெக்டேர் பரப்பளவில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பெரிய ஏரியாக, கலவை ஏரி உள்ளது. பாலாற்றில் வெள்ளம் வரும்போதெல்லாம் கலவை ஏரிக்கு தண்ணீர் வருவது வழக்கம்.
இந்த ஏரி முழுகொள்ளளவை எட்டி வெளியேறும் உபரிநீர் பென்னகரை கடந்து செய்யாறு பாலாற்றில் கலந்து அதைச்சார்ந்த விவசாய நிலங்களையும், பொதுமக்களின் தண்ணீர் தேவையையும் பூர்த்தி செய்து வந்தது. இதுமட்டுமின்றி செய்யாறை சுற்றியுள்ள பகுதிகளின் நீர் தேவையை பூர்த்திசெய்யும் இந்த ஏரி தன்னை நம்பியுள்ள பகுதிகளை கைவிடுமா என்ன? கலவை ஏரி நிரம்பினால் மேல்புலம், வேம்பி, பென்னகர், தோணிமேடு உட்பட பல்வேறு கிராமங்களின் விவசாய நிலங்களின் பயிர்களுக்கு உயிர் கொடுத்தது மட்டுமின்றி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி மக்களின் தாகத்தை தணித்து வந்தது. இதனால், இந்த பகுதி விவசாயிகள் அறுவடையில் கொடிகட்டிவந்தனர்.
ஆனால், காலத்தின் கோலம் தங்களை வளர்த்த ஏரியை ஆண்டுக்கு ஒருமுறையாவது தூர்வாரி நீர்வரத்துக் கால்வாய்களை சீரமைக்க விவசாயிகள் மறந்து விட்டனர். இதனை, அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. முறையான பராமரிப்பு இல்லாததால் தலைமுறைகளை வாழவைத்த ஏரி வறண்டது. யாருக்கும் பலனில்லாமல் சுருண்டது. நீர்வரத்து கால்வாய்கள் தூர்ந்து போய் நாளடைவில் அடையாளத்தை இழந்ததால் ஏரிக்கு நீர்வரத்து இல்லாமல் போனது.
மழை பெய்தபோதெல்லாம் ஏரி குளிர்ந்து பச்சை பசேல் என முட்புதர்கள் முளைக்க தொடங்கி ஏரி என்ற அடையாளத்தை இழந்து பரிதாபமாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே சிறிதளவு தண்ணீர் தேங்கியுள்ளது. பாதிப்பு ஏரிக்கு மட்டுமல்ல அதை நம்பியிருந்த விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும்தான். கொடிகட்டி நடந்த அறுவடை பகுதிகள் இன்று குடைசாய்ந்து கிடக்கிறது. கலவை ஏரியை நம்பி பயிர்செய்த பெரும்பாலான விவசாயிகள் இன்று பயிர்செய்ய முடியாமல் உள்ளனர். விவசாயத்தில் ஈடுபட்டுள்ள ஒருசில விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயி கள் கூறும்போது, "ஒட்டு மொத்தமாக சுமார் 30 கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் ஒரு காலத்தில் இந்த ஏரி நீரை நம்பி இருந்தன. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் ஏரி தூர்வாரப்படாமல் உள்ளது. தண்ணீரின்றி ஏரி வறண்டு காணப்படுகிறது. இதனால், விவசாயம் செய்ய முடியாமல் பலரும் தவிக்கின்றனர். ஏரி பாசனத்தை நம்பிய விவசாயிகள் தற்போது கிணற்று நீரை நம்பியே பாசனம் செய்ய வேண்டியுள்ளது.
ஏரியை தூர்வாரி மதகுகளை சீரமைக்க வேண்டும். நீர்வரத்துக் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியில் முளைத்துள்ள புதர்களையும் அகற்றினால் வரும் பருவமழைக்கு ஏரிக்கு நீர்வரத்து இருக்கும் என நம்புகிறோம். அதுமட்டுமின்றி நிலத்தடி நீர் மட்டமும் உயரும். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடமும், விவசாய குறைதீர்வு கூட்டங்களிலும் கோரிக்கை விடுத்தும் இதுவரை இந்த ஏரியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை" என்றனர்.
இதுகுறித்து மாவட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "கலவை ஏரியை தூர்வார மற்றும் சீரமைக்க திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான நிதி இந்த நிதியாண்டில் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், கிடைக்கவில்லை. அடுத்த நிதியாண்டில் அதற்கான நிதி கிடைத்தவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும்" என்றனர்.
முறையான பராமரிப்பு இல்லாததால் தலைமுறைகளை வாழவைத்த ஏரி வறண்டது. யாருக்கும் பலனில்லாமல் சுருண்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT