Published : 22 Jul 2023 06:16 AM
Last Updated : 22 Jul 2023 06:16 AM
சென்னை: அமலாக்கத் துறை பிரதமர் மோடி மீதும் பாயும் காலம் வரும் என்பதை அவர் மறந்துவிடக் கூடாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் எம்எல்ஏ கூறினார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்ற நடிகர் சிவாஜி கணேசன் நினைவு நாள் விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் பேச வேண்டிய பிரதமர், மக்களவைக்கு வெளியே வந்து பேசியது மிகப் பெரிய தவறு.
இது ஜனநாயகப் படுகொலை. இந்தசம்பவம் நிகழ்ந்து இத்தனை நாட்களுக்குப் பிறகு, இப்போதுதான் அவர் பேசுகிறார்.
மணிப்பூரில் மிகப் பெரிய கலவரம் நடந்து, உலகத்தில் உள்ளஎல்லா நாடுகளும் அதைப்பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், பிரதமர் வெளிநாடுகளுக்கு உல்லாசப் பயணம் சென்றார். இந்திய மக்கள் மீது நம்பிக்கை இல்லாதவர் மோடி. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நற்குணம் இல்லாத நபராகத்தான் பிரதமர் மோடியைப் பார்க்கிறோம். சில மாதங்களில் அவர் பதவியி லிருந்து தூக்கி எறியப்படுவார்.
பாஜகவினர் 350 இடங்களில் வெற்றிடத்தைத்தான் காணப்போகின்றனர். ஜி.கே.வாசனுக்கு,அவரது வீட்டிலேயே வாக்களிப்பார்களா என்று தெரியவில்லை.கடைசிநேரத்தில் மோடியுடன் இணைந்து காட்சியளிக்கிறார் பழனிசாமி. மோடிக்கு ஏற்படும் முடிவுதான், அவருக்கும் ஏற்படும்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சிவாஜியைவிட மிகப் பெரிய நடிகர். பாத யாத்திரை சென்றால், ராகுல் காந்தி போல பிரபலமாகலாம் என்று கருதுகிறார். அவரது பாத யாத்திரை தொடங்கும்வரை, மாநிலத் தலைவராக இருப்பதே சந்தேகம்.
அமலாக்கத் துறை மோடியின் கைப்பாவையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மோடிக்கு யாரைப் பிடிக்கவில்லையோ, யார்அரசியலில் செல்வாக்காக இருக்கிறார்களோ, அவர்களை எல்லாம் அமலாக்கத் துறை மூலம் மிரட்டிவிடலாம் என கருதுகிறார். அதேஅமலாக்கத் துறை மோடி மீதும் பாயும் காலம் வரும் என்பதை அவர் மறந்துவிடக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT