Published : 22 Jul 2023 06:25 AM
Last Updated : 22 Jul 2023 06:25 AM
சென்னை: தமிழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளின் கல்வி உதவித் தொகை இரு மடங்காக உயர்த்தி தமிழக அரசுவெளியிட்டுள்ள அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பல்வேறு நலத்திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 2013-2014-ம் நிதியாண்டு முதல் அவர்களின் கல்வியை மேம்படுத்தும் வகையில் 1-ம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் வகுப்புக்கு ஏற்றவாறு கல்வி உதவித் தொகை குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் ரூ.7,000 வரை வழங்கப்பட்டு வந்தது.
முதல்வர் அறிவிப்பு: இந்நிலையில் 2023-2024-ம் நிதியாண்டுக்கான மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மானியக் கோரிக்கையின்போது முதல்வர், ‘மாற்றுத்திறன் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை இருமடங்காக உயர்த்தி வழங்கப்படும்’ என்று அறிவித்தார்.
அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகையை இருமடங்காக உயர்த்தி, 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.1,000 என்பதை ரூ.2,000 ஆகவும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.3,000 என்பதை ரூ.6,000 ஆகவும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.4,000 என்பதை ரூ.8,000 ஆகவும் உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்வி நிலையை ஊக்கப்படுத்தும்: அதேபோல், இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.6,000 என்பதை ரூ.12,000 ஆகவும், முதுகலை பட்டம் மற்றும்தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ரூ.7,000 என்பதை ரூ.14,000 ஆகவும் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் சிறப்புக்கல்வி பெறும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி நிலையை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
மேலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு இந்தஉதவித்தொகையைப் பெறுவதற்கு பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். இவ்விண்ணப்பங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் மூலம் பரிசீலனை செய்யப்பட்டபின் கல்வி உதவித்தொகை மாணவர்களின் வங்கிக்கணக்குக்கு நேரடியாக செலுத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT