Published : 22 Jul 2023 06:32 AM
Last Updated : 22 Jul 2023 06:32 AM
சென்னை: பல்கலைக்கழக பணிகள் குறித்து ஆளுநரிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை என்று துணைவேந்தர்களிடம் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
அண்ணா பல்கலை. பதிவாளராக (பொறுப்பு) இருந்த ஜி.ரவிக்குமார் மாற்றப்பட்டு, எம்.ஐ.டி கல்லூரியின் முதல்வராக உள்ள ஜெ.பிரகாஷ் அந்த இடத்துக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆளுநரின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த மாற்றத்தை துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் நேற்றைய துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பூதாகரமாக வெடித்தது. இக்கூட்டத்தில் துணைவேந்தர் வேல்ராஜ் பேசியதற்கு அமைச்சர் பொன்முடி மிகவும் கோபமாகவே பதிலளித்தார்.
அப்போது அவர் பேசும்போது, ‘‘ஒரு கல்லூரியின் முதல்வராக இருப்பவரை பொறுப்பு பதிவாளராக ஏன் நியமிக்க வேண்டும்? எதன் அடிப்படையில் இந்த நியமனத்தை செய்தீர்கள்? இனி இத்தகைய நிகழ்வுகள் நடக்கக் கூடாது. இனி அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்களை தனிக்குழு அமைத்து அதன்மூலமே தேர்வு செய்ய வேண்டும்’’ என்றார்.
அதேபோல் துணைவேந்தரின் கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, ‘‘வருமானம் வரும்கல்லூரிகளை அண்ணா பல்கலை.யே வைத்துக் கொள்ளும். வருமானமற்ற கல்லூரிகளை நாங்கள் ஏற்க வேண்டுமா? வேண்டுமானால் உறுப்புக் கல்லூரிகளுடன், எம்ஐடி, ஏசிடெக் போன்ற அண்ணா பல்கலை. வளாகக் கல்லூரிகளையும் சேர்த்து எடுத்துகொள்கிறோம். அண்ணா பல்கலை.யில் காலிப் பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று காட்ட மாக பதிலளித்தார்.
மேலும், ‘‘பல்கலை. பணிகளை ஆளுநரிடம் கேட்டுதான் துணைவேந்தர்கள் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. பட்டமளிப்பு விழாவுக்கான தேதியை மட்டுமே ஆளுநரிடம் கேட்க வேண்டும். சிறப்பு விருந்தினர் யார் என்பதை துணைவேந்தர்களே முடிவு செய்யலாம். அதேபோல், யுஜிசி வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றுவது கட்டாயமில்லை. நமது மாநிலத்தில் என்ன சூழல் நிலவுகிறதோ அதற்கேற்பதான் செயல்பட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் வழக்கத்தைவிட பொன்முடி காட்டிய கண்டிப்பு துணைவேந்தர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT