Published : 22 Jul 2023 06:05 AM
Last Updated : 22 Jul 2023 06:05 AM

உத்திரமேரூரை அடுத்த எடமிச்சி ஊராட்சியில் கல் குவாரியின் சுற்றுச்சூழல் அனுமதி ரத்து: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: உத்திரமேரூரை அடுத்த எடமிச்சி ஊராட்சியில் கல் குவாரி தொடங்க வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை தேசிய பசுமை தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கத்தை சேர்ந்த ஜி.அர்ஜூன் என்ற முன்னாள் ராணுவ அதிகாரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த ஆண்டு தாக்கல் செய்த மனு: உத்திரமேரூர் தாலுகா, எடமிச்சி ஊராட்சியில் சரளைக்கல் குவாரி அமைக்க 2021-ம் ஆண்டு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. இந்த குவாரியிலிருந்து 600 மீட்டர் தொலைவில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். குவாரியின் உரிமையாளர் தவறான தகவல்களை தெரிவித்து குவாரிக்கான சுற்றுச்சூழல் அனுமதியை பெற்றுள்ளார்.

இந்த குவாரியில் வைக்கப்படும் வெடி மற்றும் குவாரியால் தூசி மாசு, போக்குவரத்து நெரிசல், சத்தம், நீர் மாசு போன்றவை ஆனம்பாக்கம், நெற்குன்றம் ஆகிய ஊராட்சிகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் சுற்றுச்சூழல் அனுமதிகோரிய 1-வது படிவத்தில் இவ்விரு ஊராட்சிகள் குறித்து குறிப்பிடவில்லை. குவாரி அமையும் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் 48 அடிக்கு கீழ் இருப்பதாக படிவத்தில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அப்பகுதியில் 2 முதல் 8 மீட்டர் அளவில் நிலத்தடி நீர் மட்டம் உள்ளது. எனவே கற்களை 8 மீட்டருக்கு கீழ் வெட்டி எடுக்க கூடாது. அனுமதிஅளிக்கும்போது ஆணையம் இதை கருத்தில் கொள்ளவில்லை. குவாரியில் இருந்து 50 மீட்டர் தொலைவுக்குள் அமைந்துள்ள, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3-வது பெரிய ஏரியான எடமிச்சி ஏரி தொடர்பாக 1-வது படிவத்தில் குறிப்பிடவில்லை.

குவாரியிலிருந்து 50 கிமீ தொலைவுக்குள் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட பகுதி மற்றும் எளிதில் சுற்றுச்சூழல் பாதிக்கக்கூடிய பகுதிகள் குறித்து தெரிவிக்க வேண்டும். ஆனால் குவாரியிலிருந்து 12 கிமீ தொலைவுக்குள் அமைந்துள்ள கரிக்கிலி பறவைகள் சரணாலயம் குறித்து படிவத்தில் தெரிவிக்கப்படவில்லை. குவாரி அமையும் பகுதி வேளாண் நிலம். ஆனால் வேளாண் நிலம் இல்லை என படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த குவாரிக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கில், நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் “உண்மை நிலவரத்தை கருத்தில் கொள்ளாமல் இந்த சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. எனவே இந்த சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்து, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு திருப்பி அனுப்பப்படுகிறது. அதை புதிய விண்ணப்பமாக கருதி, மீண்டும் பரிசீலித்து 3 மாதங்களுக்குள் உரிய உத்தரவை ஆணையம் பிறப்பிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x