Published : 22 Jul 2023 08:07 AM
Last Updated : 22 Jul 2023 08:07 AM
கல்பாக்கம்: திருக்கழுகுன்றம் ஒன்றியம் வாயலூர் ஊராட்சிக்குட்பட்ட ஐந்துகாணி, காரைத்திட்டு ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்கள் உள்ளன. மேலும், உய்யாலிகுப்பம் பகுதியில் மீனவர்களும் வசித்து வருகின்றனர். இந்நிலையில், உய்யாலிகுப்பம் உட்பட மேற்கண்ட பகுதியில் வசிக்கும் இருளர் மக்கள், பஞ்சாயத்து அலுவலகம், வங்கி உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்காக பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டி உள்ள சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இச்சாலை கால்வாயை ஒட்டியுள்ளதால், வெள்ளப்பெருக்கு ஏற்படும்போதெல்லாம் சாலை முற்றிலும் சேதமடைவது வாடிக்கையாக உள்ளது. இதனால் இப்பகுதி மக்களின் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சாலையை சீரமைக்க வட்டார வளர்ச்சி நிர்வாகம் நிதிப்பற்றாக்குறை எனக்கூறி பணிகளை செய்யாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், மேற்கண்ட சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து பாதசாரிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வெள்ளப்பாதிப்பின் போது சேதமடையாமல் இருக்கும் வகையில், குறிப்பிட்ட பகுதியில் 100 மீட்டர் உயரத்துக்கு சாலையை உயர்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த செந்தாமரை கூறியதாவது: பக்கிங்ஹாம் கால்வாயில் வெள்ளம் ஏற்படும்போதெல்லாம், சாலை தண்ணீரில் முழ்கி எங்கள் பகுதி போக்குவரத்து இன்றி தீவுபோல் தனித்து விடப்படுகிறது. மேலும், வெள்ளம் வடிந்த பின்னர் சேதமடைந்த நிலையில் உள்ள சாலையில் நடந்து சென்று நகரப்பகுதிக்கு செல்ல வேண்டும். இதனால், உய்யாலிகுப்பம் பகுதியில் உள்ளநடுநிலைப் பள்ளிக்கு சேதமைடந்த சாலையில் செல்ல மாணவர்கள் தயங்குகின்றனர்.
இ்ந்நிலையில் மாவட்ட ஆட்சியர் எங்கள் பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது சாலையை சீரமைக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார். ஆனாலும் இதுவரை பணிகள் தொடங்கவில்லை. அதனால், மாணவர்கள் பள்ளி செல்வதற்காகவாவது இச்சாலையை சீரமைக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
இதுகுறித்து, அதேப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகம் கூறும்போது, உய்யாலிகுப்பம்- ஐந்துகாணி இடையே பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டியுள்ள 350 மீட்டர் சாலையில், குறிப்பிட்ட 100 மீட்டர் சாலையை வீராணம் சிமெண்ட் குழாய்களை அமைத்து, சுமார் 3 அல்லது 4 அடி உயரம் உயர்த்தி அமைத்தால், சாலை வெள்ள பாதிப்பில் சிக்காமல் இப்பகுதி மக்கள் போக்குவரத்துக்கு பயன்படும். பிள்ளைகளும் தயக்கமின்றி பள்ளிக்குச் செல்வார்கள் என்றார்.
இதுகுறித்து, திருக்கழுகுன்றம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கூறியதாவது: வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த நிலையில் உள்ள ஐந்துகாணி- உய்யாலிகுப்பம் இடையேயான 350 மீட்டர் சாலை, பக்கிங்ஹாம் கால்வாயையொட்டி உள்ளதால் நீர்நிலை பகுதியாக கருதப்படுகிறது. அதனால், ஊராட்சி ஒன்றிய திட்டங்களில் அச்சாலை சீரமைக்க முடியாது. மாவட்ட ஆட்சியரின் சிறப்பு அனுமதியின் மூலம் மட்டுமே சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியும். இருளர் மக்களின் கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லபடும். இவ்வாறு தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT