Published : 23 Nov 2017 10:07 AM
Last Updated : 23 Nov 2017 10:07 AM
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்கப்படுத்தவும் ‘சைக்கிள் ஷேரிங்’ திட்டத்தை முதல்முறையாக சென்னை மாநகராட்சி செயல்படுத்த உள்ளது. சென்னை முழுவதும் 378 சைக்கிள் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
உலகின் பல நாடுகளிலும் ‘சைக்கிள் ஷேரிங்’ திட்டம் பிரபலமடைந்து வருகிறது. லண்டன், பாரீஸ், நியூயார்க், மெக்சிகோ சிட்டி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பொதுமக்களின் வரவேற்பை பெற்றுள்ள இத்திட்டம் விரைவில் சென்னையில் செயல்படுத்தப்பட உள்ளது.
நாட்டில் உள்ள மாநகராட்சி களிலேயே முதல்முறையாக ‘மோட்டார் அல்லாத வாகனப் போக்குவரத்து கொள்கை’யை சென்னை மாநகராட்சி உருவாக்கியுள்ளது. அதன்படி, தி.நகர் பாண்டிபஜார், எழும்பூர் பாந்தியன் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் நடந்து செல்வோருக்கு உகந்த நடைபாதைகளை சென்னை மாநகராட்சி அமைத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ‘சைக்கிள் ஷேரிங்’ திட்டத்தை செயல்படுத்த உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்துக்கான நிர்வாக அனுமதியை மாநகராட்சி நிர்வாகம் சமீபத்தில் வழங்கி யுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் சைக்கிள் பயணம் குறைந்துவிட்டது. தற்போது உள்ள போக்குவரத்து வகைகள் அனைத்துமே, காற்று மாசு ஏற்படுத்தக்கூடியவை. எனவே, மாநகரில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் விதமாகவும், நீரிழிவு நோய், உடல் பருமன் போன்ற பாதிப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும் மாநகராட்சி சார்பில் ‘சைக்கிள் ஷேரிங்’ திட்டம் செயல்படுத்தப் பட உள்ளது.
இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, ஆட்டோ, டாக்ஸிகளில் ஒருவர் மட்டுமே செல்வது குறைந்து சென்னையில் போக்குவரத்து நெரிசலும் குறையும். வாகனப் புகை குறைவதால் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.
மொத்தம் 4,976 சைக்கிள்கள்
இத்திட்டத்தின்படி, மாநகரம் முழுவதும் முக்கிய பள்ளிகள், கல்லூரிகள், மெட்ரோ ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் உட்பட மக்கள் அதிகம் கூடுகிற 378 இடங்களில் ‘சைக்கிள் ஷேரிங்’ நிலையங்கள் அமைக்கப்படும். அவற்றில் மொத்தம் 4,976 சைக்கிள்கள் நிறுத்தப்படும். இந்த சைக்கிள்கள் தலா ரூ.12 ஆயிரம் விலை கொண்டவை. அதில் நவீன தொழில்நுட்ப வசதிகள் இருக்கும். பிரத்யேக ஸ்மார்ட்போன் செயலி மூலம், சைக்கிள் மீது உள்ள குறியீட்டை ஸ்கேன் செய்து சைக்கிளை எடுத்துக்கொள்ளலாம். பணமில்லா பரிவர்த்தனை முறையில், செயலி மூலமாகவே கட்டணம் பெறப் படும். கட்டணம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. இத்திட்டத்துக்கு ரூ.9 கோடியே 50 லட்சம் செலவாகும் என மதிப்பிடப் பட்டுள்ளது.
378 ‘சைக்கிள் ஷேரிங்’ நிலை யங்களை மட்டுமே மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி கொடுக்கும். திட்டத்துக்கான முதலீடுகள் அனைத்தையும் ‘சைக்கிள் ஷேரிங்’ சேவை வழங்கும் ஒப்பந்ததாரர் மேற்கொள்வார். அந்த இடங்கள் மற்றும் சைக்கிளின் பராமரிப்பு, பாதுகாப்பு, கட்டணம் வசூலிப்பு உள்ளிட்ட அனைத்தும் சேவை வழங்கும் ஒப்பந்ததாரரின் முழு பொறுப்பாகும்.
இத்திட்டத்துக்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஒப்பந்தாரர்கள் தங்கள் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுபெற்று வருகின்றனர். குறைந்த வாடகையில் சைக் கிள் வழங்கும் ஒப்பந்ததாரருக்கு ‘சைக்கிள் ஷேரிங்’ ஒப்பந்தம் வழங்கப்படும்.
ஒரு நிலையத்தில் சைக்கிளை எடுத்தால், மீண்டும் அங்கேதான் விடவேண்டும் என்ற அவசியம் இல்லை. தாங்கள் சென்றடைகிற இடத்துக்கு அருகில் உள்ள நிலையத்தில் விடலாம். டாக்ஸி, ஆட்டோ செல்லாத தெருக்களில்கூட சைக்கிளில் செல்ல முடியும். இத்திட்டம் பொதுமக்களுக்கு வரப்பிரசாதமாக இருக் கும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT