Published : 22 Jul 2014 09:59 AM
Last Updated : 22 Jul 2014 09:59 AM

அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும்: அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் விலையில்லா மடிக் கணினி வழங்கிட தமிழக அரசு முன்வர வேண்டுமென மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழகத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கிற மாணவர்களுக்கு விலையில்லா மடிக் கணினிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. இதில் பன்னிரெண்டாம் வகுப்பில் கணினி அறிவியல் பிரிவில் பயிலும் மாணவர்களுக்கும், சுயநிதிப் பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கும் மடிக் கணினி வழங்கப்படவில்லை என்று திருநெல்வேலி உள்ளிட்ட பல இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விலையில்லா மடிக் கணினி கிடைக்கப்பெறாத மாணவச் செல்வங்கள் தங்கள் கோரிக்கையினை நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்திட 21.07.2014 அன்று ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு சென்றனர். அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி, மாணவர்களின் மனம் புண்படும் வகையில் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, மாணவர்களின் சட்டையைப் பிடித்து இழுத்து கிழித்துள்ளதோடு, பலமாகத் தாக்கியும் உள்ளனர்.

காவல்துறையினரின் இச் செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, மாணவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை ஏற்று அரசு பள்ளி, அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மடிக் கணினி வழங்கிட முன்வர வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x