Published : 17 Nov 2017 03:15 PM
Last Updated : 17 Nov 2017 03:15 PM
நாகர்கோவிலில் பைக் மீது, டெம்போ மோதி பனிரெண்டாம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிர் இழந்தார்.
நாகர்கோவில் கணேசபுரம் புலவர்விளை பகுதியைச் சேர்ந்தவர் சஜீவ். இவரின் மனைவி லெட்சுமி. சஜீவ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர்களின் மகள் சத்யஸ்ரீ(17) நாகர்கோவில் டதி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
வெள்ளிக்கிழமை காலை தன் சகோதரர் ஹரியுடன் பைக்கில் பள்ளிக்குச் சென்றார். பள்ளியின் நுழைவு வாயில் அருகில் பைக் சென்ற போது, அந்த வழியாக பாறாங்கற்கள் ஏற்றி வந்த டெம்போ வேன் ஒன்று பைக் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி விழுந்த சத்யஸ்ரீ மீது டெம்போ ஏறி நசுக்கியது. இதில் மாணவி சத்யஸ்ரீ சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
விபத்து நிகழ்ந்ததும் டெம்போவை ஓட்டி வந்தவர், வண்டியை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார்.
மாணவி சத்யஸ்ரீயின் மரணம் குறித்து நாகர்கோவில் போக்குவரத்துப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சகோதரர் ஹரி காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
பள்ளிக்கு வந்துகொண்டிருக்கும் போது மாணவி உயிரிழந்ததைத் தொடர்ந்து, பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. சக மாணவி இறந்த செய்தி கேட்டு மாணவிகளும் ஆசிரியர்களும் அழுதது பரிதாபமாக இருந்தது.
சாலை விபத்தை தடுக்க செய்யவேண்டியவை..
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக அளவில் சாலை விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. காவல் துறை பதிவேட்டின்படி, கடந்த வாரம் மட்டும் நான்கு பேர் சாலை விபத்தில் பலியாகி உள்ளனர். விபத்து நடந்த இடத்தின் அருகிலேயே ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கட்டிடமும் உள்ளது. இந்தச் சாலை, நீதிமன்றம், பி.எஸ்.என்.எல் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்குச் செல்லும் வழிப்பாதையாகவும் உள்ளது. ஆனால் இங்கு இன்னும் வேகத்தடை அமைக்கப்படவில்லை. அதை உடனே அமைக்க வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாறாங்கற்கள் ஏற்றி வரும் டெம்போக்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட மிக அதிக அளவில் ஏற்றி வருகின்றன. மேலும் போலீஸார் பிடியில் சிக்காமல் இருக்க அதிவேகத்தில் பயணிக்கின்றனர். இதைக் கண்காணித்து நடவடிக்கை எடுத்தால், நகருக்குள் சீறிப் பாயும் கனரக வாகனங்களைக் கட்டுக்குள் கொண்டு வரலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT