Published : 13 Nov 2017 10:03 AM
Last Updated : 13 Nov 2017 10:03 AM

ரயில் இயக்கத்தில் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை: 30 ஆண்டுகளில் 2,052 ரயில் இன்ஜின்கள் நீக்கம்; ஜெர்மனி, ஜப்பானுடன் இணைந்து ரயில்வே விரைவில் ஆய்வு

தொழில்நுட்ப கோளாறு, சுற்றுச்சூழல் பாதிப்பை தவிர்க்கும் வகையில் இந்திய ரயில்வே துறையில் 30 ஆண்டுகளில் 2,052 ரயில் இன்ஜின்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், ரயில் இயக்கத்தில் பாதுகாப்பை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பான் நாடுகளுடன் இணைந்து விரைவில் ஆய்வு நடத்தப்படுகிறது.

இந்தியாவில் போக்குவரத்து வாகனங்கள் மூலம் ஆண்டுதோறும் 250 மில்லியன் டன் கரியமில வாயு வெளியேற்றப்படுகின்றன. இதில் சாலை வாகனங்களால் 80.9 சதவீதமும், டீசல் ரயில் இன்ஜின்களால் 9.7 சதவீதமும் வெளியேறுகிறது. இந்திய ரயில்வே 2020-க்குள் 3.33 மில்லியன் டன் கரியமில வாயு வெளியேறுவதைக் கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளது.

ரயில்வே துறையில் தற்போது மொத்தம் 5,380 ரயில் இன்ஜின்கள் உள்ளன. பழமையான ரயில் இன்ஜின்களால் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறு, சுற்றுச்சூழல் பாதிப்பைத் தவிர்க்கும் வகையில் பழமையான ரயில் இன்ஜின்கள் படிப்படியாக நீக்கப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக ரயில் ஓட்டுநர்கள் சிலர் கூறும்போது, ‘‘இந்திய ரயில்வேயில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள பழமையான ரயில் இன்ஜின்களில் கார்பன் தர சோதனை நடத்த வேண்டும். இந்த சோதனையின் ஆய்வு முடிவுகள் மூலம் ரயில் இன்ஜின் பயன்பாடு மூலம் டீசல் விரயமாவதையும் தடுக்க முடியும். தொழில்நுட்பக் கோளாறுகள் மூலம் ரயில் இன்ஜின்கள் நடுவழியில் நிற்பதைத் தடுக்க முடியும். மேலும், நிர்ணயித்துள்ள நேரத்தில் பழமையான ரயில் இன்ஜின் வேகத்தையும் கூட்ட முடியும்’’ என்றனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: பொதுமக்களுக்கு வசதியான பயணம் மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நல்ல போக்குவரத்து வசதியாக ரயில் போக்குவரத்து இருக்கிறது. டீசல் இன்ஜின்களின் பயன்பாட்டை படிப்படியாக குறைத்து வருகிறோம். அதற்கு ஏற்றார்போல், மின்பாதை அமைக்கும் பணிகளையும் அதிகரித்துள்ளோம்.

நாடுமுழுவதும் ஆண்டுதோறும் சுமார் 4,000 கி.மீ. தூரம் மின்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 30 ஆண்டுகளில் மொத்தம் 2,052 ரயில் இன்ஜின்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில், டீசல் இன்ஜின்கள் மட்டும் 1457 ஆகும்.

ரயில் விபத்துகளால் மட்டுமே 49 ரயில் இன்ஜின்கள் நீக்கப்பட்டுள்ளன. இதேபோல், ரயில்கள் இயக்கம் மற்றும் பாதுகாப்புகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். மேலும் ஜெர்மன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து ரயில்வே பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தவுள்ளோம். இதற்கான ஆய்வுகளை விரைவில் தொடங்கவுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x