Published : 22 Jul 2023 04:38 AM
Last Updated : 22 Jul 2023 04:38 AM
தருமபுரி: மகளிருக்கு பயனளிக்கும் திட்டங்களை தருமபுரி மண்ணில் தொடங்குவது திமுக ஆட்சியின் வழக்கம் என தருமபுரியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நேற்று (ஜூலை 21) தருமபுரியில் தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சி, வரும் 24-ம் தேதி தருமபுரி மாவட்டம் தொப்பூரில் நடக்கவுள்ளது. இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ள பகுதியை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று (ஜூலை 21) மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: "வரும் 24-ம் தேதி காலை 9.30 மணியளவில் தொப்பூரில் நடக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட முகாம் தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த திட்டம் வருமா? என்று கூறி வந்த எதிர்க்கட்சியினரின் விமர்சனத்தை இந்நிகழ்ச்சி பொய்யாக்க உள்ளது. கடும் நிதி நெருக்கடிகளுக்கு இடையிலும், அளித்த வாக்குறுதிகளை முதல்வர் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி தருமபுரி மாவட்டத்தில் தான் மகளிர் சுய உதவிக் குழுக்களை முதன்முதலாக 1989-ல் தொடங்கி வைத்தார். அவரது மகனும், இன்றைய தமிழக முதல்வருமான ஸ்டாலின் தற்போது மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை இந்த மாவட்டத்தில் தொடங்கி வைக்கிறார்.
அதிக பெண் சிசு மரணங்கள் நிகழ்ந்த தருமபுரி மாவட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவிக் குழு திட்டத்தை கருணாநிதி அன்று தருமபுரி மண்ணில் தொடங்கி வைத்தார். அந்த திட்டம் தற்போது தமிழகம் முழுக்க ஆலமரம் போல் வளர்ந்து, பல லட்சம் கோடி பணத்தை மகளிர் சுய உதவிக் குழுக்கள் நிர்வகிக்கவும், சேமிக்கவும் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு, இரு திமுக முதல்வர்களும் மகளிருக்கு பயனளிக்கும் திட்டங்களை தருமபுரி மண்ணில் இருந்து தொடங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்" இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்ச்சியின்போது, மாவட்ட ஆட்சியர் சாந்தி, காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், திமுக மாவட்ட செயலாளர்கள் பழனியப்பன்(மே), தடங்கம் சுப்பிரமணி(கி) உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT